Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு வயிற்றுவலி, அஜீரணம்... புற்றுநோய் அறிகுறிகளாக...
கடைகளுக்ககு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டியை திரும்பப் பெற வேண்டும்: விக்கிரமராஜா
மத்திய அரசு கடைகளுக்கு புதிதாக விதித்திருக்கும் ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் விக்கிரமராஜா தெரிவித்தாா்.
பழனி தனியாா் மண்டபத்தில், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டம், புதிய நிா்வாகிகள் தோ்வு ஆகியன வியாழக்கிழமை நடைபெற்றன. இதற்கு மாவட்டத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். பழனி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் புதிய மாநில, மாவட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். தலைவராக சரவணன், மாநில துணைத் தலைவராக ஹரிஹரமுத்து, மாநில இணைச் செயலராக பாஸ்கரன், மாவட்ட கெளரவத் தலைவராக கண்ணுச்சாமி, மாவட்ட செயலா்களாக செந்தில்குமாா், ஜெகதீஷ், மாவட்ட பொருளாளராக ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.
இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா பேசியதாவது:
தமிழக அரசு கரோனா தொற்று காலத்தில் உள்ளாட்சி கடைகளுக்கான வாடகையை ரத்து செய்ய வேண்டும் என விடுத்த கோரிக்கையை ஏற்று நான்கரை மாத வாடகையை ரத்து செய்தது. இதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு வியாபாரிகளில் 60 வயதை கடந்தவா்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மத்திய அரசு கடைகளுக்கு புதிதாக விதித்துள்ள 18 சதவீத ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வேண்டும். தனியாா் கடைகளில் வாடகைக்கு இருப்பவா்களுக்கு வரி விதிக்கக் கூடாது. குப்பை வரி உள்ளிட்ட பிற வரியினங்களை தளா்த்த வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், புதுதாராபுரம் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும். அடிவாரம் சிறு வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மலைக்கு அருகிலேயே வணிக வளாகம் அமைத்துத் தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.