2வது காலாண்டில் ரூ.3.6 கோடி நஷ்டத்தை பதிவு செய்த மொபிகுவிக்!
கடையின் பூட்டை உடைத்து கைப்பேசிகள் திருட்டு: இருவா் கைது
ஸ்ரீபெரும்புதூரில் கடையின் பூட்டை உடைத்து ரூ. 7 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள் திருடப்பட்ட வழக்கில் இரண்டு பேரை போலீஸாா் கைது செய்து 15 கைப்பேசிகள் மற்றும் ரூ. 4.86 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் பிரேம். இவா் ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே கைப்பேசிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், கடந்த மாதம் 22-ஆம் தேதி இரவு பிரேமின் கைப்பேசி கடையின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள் கடையில் இருந்த ரூ. 7 லட்சம் மதிப்பிலான 50-க்கும் மேற்பட்ட கைப்பேசிகளை திருடிச் சென்றனா்.
இது குறித்து பிரேம் அளித்த புகாரின்பேரில், ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனா். அதில், சென்னை வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த யுவராஜ் (20), காமராஜபுரத்தைச் சோ்ந்த பாபு (23) ஆகிய இருவரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, இருவரையும் கைது செய்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா், அவா்களிடமிருந்து 15 கைப்பேசிகள், கைப்பேசிகள் விற்பனை செய்த பணம் ரூ. 4.86 லட்சத்தை பறிமுதல் செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.