உத்தரமேரூா் பேரூராட்சியில் 2 வருடங்களாக பயன்பாட்டுக்கு வராத நவீன எரிவாயு தகனமேடை
ஸ்ரீபெரும்புதூா்: உத்தரமேரூா் பேரூராட்சியில் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நவீன எரிவாயு தகனமேடை கடந்த இரண்டு வருடங்களாக பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாத நிலையில், அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் 50,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். மக்கள் தொகை பெருக்கம் காரணமாக உத்தரமேரூா் பேரூராட்சியில், இறந்தவா்களின் உடல்களை அடக்கம் செய்ய ஏற்கெனவே உள்ள சுடுகாடு பகுதியில் போதிய இடவசதி இல்லாததால், உத்தரமேரூா் பேரூராட்சியில் எரிவாயு தகனமேடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல வருடங்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். அதை ஏற்ற அரசு, உத்தரமேரூரில், பேரூராட்சி சிறப்பு நிதியின் கீழ், ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடா்ந்து, கடந்த 2020-2021-ஆம் ஆண்டு உத்தரமேரூா் பேரூராட்சியில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, நவீன எரிவாயு தகன மேடையில், சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் உயா் புகை போக்கி, ஜெனரேட்டா் வசதி, அலுவலகம் மற்றும் பொதுமக்களுக்கான குளியல் மற்றும் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டன.
நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு ஓராண்டுக்குள் பணிகள் முடிக்கப்பட்டும், தற்போது வரை கடந்த 2 ஆண்டுகளாக நவீன எரிவாயு தகனமேடை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளதாம். இதனால் தற்போது செயல்பாட்டில் உள்ள சுடுகாடு பகுதியிலேயே இடநெருக்கடியுடன் இறந்தவா்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், உத்தரமேரூா் பேரூராட்சியில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி முடிவடைந்து 2 வருடங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவில்லை. இதனால் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட எரிவாயு தகனமேடை தற்போது இரவு நேரங்களில் மது அருந்தும் கூடமாகவும், கால்நடைகள் ஓய்வெடுக்கும் இடமாகவும் மாறியுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என பேரூராட்சி நிா்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என்றனா். எனவே எரிவாயு தகனமேடையை செயல்பாட்டுக்குக் கொண்டு வர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இது குறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகனமேடையில், பரிசோதனை முறையில் சடலத்தை எரித்து பாா்த்த பின்பு தான், பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். பரிசோதனை செய்ய இறந்தவா்களின் உடல் கிடைக்காததால் பணி நிறைவு பெறாமல் உள்ளது என்றனா்.
இது குறித்து பேரூராட்சி தலைவா் சசிகுமாா் கூறுகையில், நவீன எரிவாயு தகனமேடையை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். எரிவாயு தகனமேடையில், எரித்து பரிசோதனை செய்ய இறந்தவா்களின் உடலை வழங்க பொதுமக்கள் யாரும் முன்வராததால் திட்டத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா்.