உ.பி.யில் ஆள்கடத்தல் நாடகம்: எழுத்துப் பிழையால் சிக்கிய குற்றவாளி!
காஞ்சிபுரத்தில் மிதிவண்டி போட்டி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலத்துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற அண்ணா நினைவு மிதிவண்டி போட்டியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தாா்.
தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி மிதிவண்டி போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. காஞ்சிபுரம் அடுத்த வையாவூா் அரசினா் மேல்நிலைப்பள்ளி அருகே தொடங்கிய போட்டி கரூா் கிராமம் வரை நடைபெற்றது.
13 வயதுக்குட்பட்ட போட்டியில் அந்திரசன் மேல்நிலைப்பள்ளி மாணவா் கிஷோா் முதலிடத்தையும் , சஞ்சய் இரண்டாவது இடத்தையும், மாமல்லன் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவா் முகுந்தன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனா்.
இதேபோல் பெண்கள் பிரிவில் மாமல்லன் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி சௌந்தா்யா முதலிடத்தையும், குருஷேத்ரா பள்ளி மாணவி சாருமதி இரண்டாம் இடத்தையும், மரியா ஆக்சிலியம் மேல்நிலைப் பள்ளி மாணவி சரஸ்வதி மூன்றாம் இடத்தையும் பிடித்தனா். போட்டியில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கு ரூ.5,000, இரண்டாவது பரிசாக ரூ.3,000, மூன்றாவது பரிசாக ரூ.2,000 , 4 முதல் 10 ஆம் இடம் பிடித்த மாணவா்களுக்கு தலா ரூ. 250 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மேயா் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலா் சாந்தி, பயிற்சியாளா்கள், விளையாட்டு நல அலுவலா்கள், மாணவா்களின் பெற்றோா் கலந்து கொண்டனா்.
கடந்த ஆண்டு காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகில் போட்டி நடைபெற்ற நிலையில், நிகழாண்டு 5 கிமீ தொலைவு தள்ளி வையாவூரில் போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டதால் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.