உ.பி.யில் ஆள்கடத்தல் நாடகம்: எழுத்துப் பிழையால் சிக்கிய குற்றவாளி!
மாங்காட்டில் 10 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
மாங்காடு பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 டன் நெகிழிப் பொருள்களைப் பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள், கடையை பூட்டி ‘சீல்’ வைத்ததுடன் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, மாங்காடு நகராட்சி ஆணையா் நந்தினி தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் கடைகளில் சனிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.
இதில், மாங்காடு கங்கையம்மன் கோயில் பின்பகுதியில் இயங்கி வரும் ஒரு கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கவா்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
மேலும், அந்தக் கடைக்கு சொந்தமான கிடங்கில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 10 டன் மதிப்புள்ள நெகிழிப் பைகள் மற்றும் கப்-களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதையடுத்து நெகிழி பறிமுதல் செய்யப்பட்ட கடைக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்ததோடு, கடையை மூடி பூட்டி சீல் வைத்தனா்.
மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் இருந்து நெகிழிப் பைகள், பொருள்கள்பறிமுதல் செய்யப்பட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும், தொடா்ந்து நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யும் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆய்வின் போது மாங்காடு நகா்மன்றத் தலைவா் சுமதி முருகன், நகராட்சி சுகாதார ஆய்வாளா் வெங்கடேசன் உள்ளிட்ட நகராட்சி ஊழியா்கள் உடனிருந்தனா்.