கட்சி நன்கொடை: பாஜக-வுக்கு ரூ.2244 கோடி, காங்கிரஸுக்கு ரூ.289 கோடி; மற்ற கட்சிகளுக்கு எவ்வளவு...?
பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க தேர்தல் பத்திரம் என்ற ஒன்றை அறிமுகம் செய்தது. அதன் மூலம் அரசியல் கட்சிகளை மிரட்டி பா.ஜ.க பணம் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இப்பிரச்னை சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. தேர்தல் பத்திரத்தை சுப்ரீம் கோர்ட் கடந்த பிப்ரவரி மாதம் ரத்து செய்து உத்தரவிட்டது. அப்படி இருந்தும் பா.ஜ.க விற்கு நன்கொடை தாராளமாக கிடைத்திருக்கிறது. பா.ஜ.கவிற்கு தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் கடந்த ஆண்டு நன்கொடையை தாராளமாக வழங்கி இருக்கின்றன.
2023-24ம் ஆண்டில் மட்டும் பா.ஜ.கவிற்கு 2244 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்திருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட மூன்று மடங்கு அதிகமாகும். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு 288.9 கோடி ரூபாய் மட்டும் நன்கொடையாக கிடைத்திருக்கிறது.
முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் இது அதிகம்தான். முந்தைய ஆண்டு இது 79.9 கோடியாக மட்டுமே இருந்தது. ஏர்டெல் உள்பட கார்ப்பரேட் கம்பெனிகள் சேர்ந்து தொடங்கி இருக்கும் புருடண்ட் எலக்டோரல் டிரஸ்ட் மூலம் பா.ஜ.கவிற்கு 723 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு இந்த டிரஸ்ட் 156 கோடி ரூபாயை கொடுத்திருக்கிறது.
தேர்தல் பத்திரத்தின் மூலம் பா.ஜ.கவிற்கு 850 கோடி கிடைத்திருக்கிறது. இதில் 723 கோடி புருடெண்ட் எலக்டோரல் டிரஸ்ட் மூலம் கிடைத்திருக்கிறது.
கடந்த தேர்தலில் ஆட்சியை இழந்த ராஷ்ட்ரீய சமீதி மற்றும் ஒய்.எஸ்.ஆர் கட்சிகளுக்கு இந்த டிரஸ்ட் முறையே ரூ.85 கோடி மற்றும் ரூ.62 கோடியை நன்கொடையாக வழங்கி இருக்கிறது.
காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவிற்கு தேர்தல் பத்திரம் மூலம் கிடைத்த நன்கொடை விவரம் கிடைக்கவில்லை. அது தொடர்பான விவரம் அரசியல் கட்சிகளின் ஆண்டு தணிக்கை அறிக்கையில் தான் தெரிய வரும். சில கட்சிகள் தாங்களாக முன்வந்து தேர்தல் பத்திரத்தின் மூலம் கிடைத்த நன்கொடை விவரங்களை தெரிவித்துள்ளன.
தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தங்களுக்கு 495 கோடி ரூபாய் தேர்தல் பத்திரத்தின் மூலம் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளது. தி.மு.க ரூ.60 கோடியும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ரூ.121 கோடியும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக பெற்றுள்ளன. பா.ஜ.கவிற்கு லாட்டரி மன்னன் மார்ட்டின் நிறுவனம் ரூ.3 கோடி நன்கொடையாக கொடுத்டுள்ளது.
ஆம் ஆத்மிக்கு 2023-24ம் ஆண்டில் ரூ.11.1 கோடி நன்கொடையாக கிடைத்திருக்கிறது. இது முந்தைய ஆண்டில் 37 கோடியாக இருந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.7.6 கோடி நன்கொடையாக கிடைத்திருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியும், பிஜு ஜனதா தளம் கட்சியும் தங்களுக்கு நன்கொடை கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளன. இப்போது அறிவிக்கப்பட்ட நன்கொடைகள் அனைத்தும் ரூ.20 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகை மூலம் கிடைத்தது ஆகும். சமாஜ்வாடி கட்சிக்கு ரூ. 46.7 லட்சம் மட்டுமே நன்கொடையாக கிடைத்திருக்கிறது. இது முந்தைய ஆண்டில் 33 கோடியாக இருந்தது. தெலுங்கு தேசம் கட்சிக்கு 2023-24ம் ஆண்டில் 100 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த தகவல்கள் அனைத்தும் தேர்தல் கமிஷனின் இணையத்தளத்தில் இருந்து கிடைத்தவையாகும். நாட்டிலேயே பா.ஜ.கவிற்கு அடுத்தபடியாக ராஷ்ட்ரீய சமீதி கட்சிக்கு ஒரே ஆண்டில் 580 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்திருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு அந்த தொகையில் பாதிதான் கிடைத்திருக்கிறது. பா.ஜ.கவிற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 2023-24ம் ஆண்டு கிடைத்த நன்கொடை 212 சதவீதம் அளவுக்கு அதிகரித்து இருக்கிறது. தேர்தலுக்கு முந்தைய ஆண்டில் இது போன்று நன்கொடைகள் அதிகமாக கிடைப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. 2018-19ம் ஆண்டு பா.ஜ.கவிற்கு 742 கோடியும், காங்கிரஸ் கட்சிக்கு 146 கோடியும் கிடைத்திருந்தது.