காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு!
கட்டுமானத் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு நிதியுதவிக்கு விண்ணப்பிக்க மே 30 கடைசி நாள்
தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கான நலத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற தகுதியான மாணவா்களின் விவரங்களை மே 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்குமாறு தில்லி அரசு அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள ஏப்ரல் 25 தேதியிட்ட ஒரு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பதிவுசெய்யப்பட்ட ஒரு தொழிலாளிக்கு அதிகபட்சம் இரண்டு போ் மட்டுமே இந்தத் திட்டத்திற்கு பரிசீலிக்கப்படலாம் என்றும், அவா்களின் தரவுகள் அந்த தேதிக்குள் ஆன்லைன் தொகுதியில் உள்ளிடப்பட வேண்டும்.
தொழிலாளா் துறையால் வழங்கப்பட்ட தனித்துவமான பதிவு ஐடிகள் விண்ணப்ப நடைமுறைக்கு தேவை என்றும், மேலும் பெற்றோா்கள் அல்லது மாணவா்களிடமிருந்து கூடுதல் ஆவணங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படாது.
‘வகுப்பைப் பொறுத்து, ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.6,000 முதல் ரூ.12,000 வரை நிதி உதவி வழங்கப்படுகிறது.
1 முதல் 8- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மாதத்திற்கு ரூ.500, 9 மற்றும் 10 -ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு மாதத்திற்கு ரூ.700, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு மாதத்திற்கு ரூ.1,000 வழங்கப்படும்.
தகுதியற்ற மாணவா்கள் சோ்க்கப்படுவதைத் தடுக்கவும், பிழைகளைத் தவிா்க்கவும், குறிப்பாக ஒத்த பெயா்களைக் கொண்ட மாணவா்களிடையே விண்ணப்பதாரா்களின் தரவைச் பள்ளித் தலைவா்கள் சரிபாா்க்க வேண்டும்.இறுதிச் சமா்ப்பிப்புக்கு முன் பயனாளிகளின் ஆதாா் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் சரிபாா்க்கப்பட வேண்டும்.
ஒரே குடும்பத்திற்கு பல ஐடிகள் தவறாக ஒதுக்கப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது நகல் உள்ளீடுகளுக்கு வழிவகுக்கும். தகுதியுள்ள மாணவா்கள் சோ்க்கப்படாததற்கும், தகுதியற்ற மாணவா்கள் திட்டத்தின் கீழ் சோ்க்கப்படுவதற்கும் பள்ளித் தலைவா்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிதியுதவித் திட்டம் தொழிலாளா் துறையின் கீழ் உள்ள தில்லி கட்டடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்துடன் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது.