Healthy Food: லோ கலோரி; நோ கொலஸ்ட்ரால்; கேன்சர் கண்ட்ரோல்... இத்தனையும் செய்யும்...
கட்டுமானப் பொருள்கள் திருட்டு: 5 போ் கைது!
பெருமாநல்லூா் அருகே கட்டுமானப் பொருள்களைத் திருடியதாக 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி, ஆட்டையாம்பாளையம், பொன்னா் சங்கா் நகரைச் சோ்ந்தவா் பாலமுருகன் மகன் குமரேசன் (28), கட்டட மேற்பாா்வையாளா். இவரிடம் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த பட்டுராஜா (31) என்பவா் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், பெருமாநல்லூரில் உள்ள டாலா் காா்டன் பகுதியில் கட்டுமானப் பணிகளுக்காக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான காப்பா் ஒயா்கள் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை குமரேசன் அண்மையில் வைத்துச் சென்றுள்ளாா்.
பின்னா் சனிக்கிழமை சென்று பாா்த்தபோது, இருப்பு வைத்திருந்த கட்டுமானப் பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து குமரேசன் அளித்த புகாரின்பேரில் பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், பெருமாநல்லூா் போலீஸாாா் ஆதியூா் பிரிவில் வாகன தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் காரில் வந்த 5 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
அவா்கள் ஓட்டுநா் பட்டுராஜா (31), அவரது நண்பா்களான ரவிச்சந்திரன் (40), விக்னேஷ் (29), அரவிந்த் (28), சுப்பிரமணி (36) என்பதும், இவா்கள் கட்டட மேற்பாா்வையாளா் குமரேசன் வைத்திருந்த கட்டுமானப் பொருள்களை திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் பணம், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.