கணவர் இறந்தது தெரியாமல்..எலி செத்ததாக நினைத்திருந்த மனைவி!
கோவையில் கணவன் இறந்து கிடந்தது தெரியாமல் வீட்டிற்குள் வசித்த மனைவி, துர்நாற்றத்தை எலி செத்ததால் வந்தது என நம்பிய சோக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவை, தெற்கு உக்கடம் அருகே உள்ள கோட்டை புதூர் காந்தி நகரை சேர்ந்தவர் அப்துல் ஷா (வயது 48 ). இவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர்.
அப்துல் ஷா, வேலைக்குச் செல்லாமல் மது குடித்து விட்டு வருவது வழக்கம். அவரது மனைவி உடல்நிலை சரியில்லாதவர். இதனால் அவரது மகன் ஷாருக்கான் மற்றும் மகள் ஆகியோர் அருகில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி இருந்து வந்தனர்.
அப்துல் ஷாவும் அவரது மனைவியும் காந்தி நகர் வீட்டில் வசித்து வந்தனர். அவ்வப் போது பெற்றோரை இருவரும் வந்து பார்த்து செல்வார்கள்.
இந்த நிலையில் கடந்த 5 நாள்களுக்கு முன்பு அப்துல் ஷா பக்கத்து வீட்டில் வசிக்கும் சிலர் அவரது மகன் ஷாருக்கானுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர், அப்போது உங்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக செல்போனில் தகவல் தெரிவித்து உள்ளனர்.
உடனே ஷாருக்கான் பெற்றோர் வீட்டிற்கு விரைந்து வந்தார். அப்போது வீட்டில் உள்ள படுக்கை அறையில் அப்துல் ஷா படுத்த நிலையில் கிடந்தார். உடனே தாயிடம் ஷாருக்கான் ஏதோ ? நாற்றம் வருகிறதே என்ன நாற்றம் என்று கேட்டு உள்ளார். அப்போது அவரது தாயார் எலி எங்காவது செத்து கிடக்கும். அதில் இருந்து தான் துர்நாற்றம் வருகிறது என்று கூறி உள்ளார்.
எனவே தந்தை அப்துல் ஷா தூங்குவதாக நினைத்து ஷாருக்கானும் அங்கிருந்து சென்று விட்டார். இந்த நிலையில் மறுநாள் துர்நாற்றம் அதிக அளவில் வீசி உள்ளது. இதனால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் அதைத் தாங்க முடியாமல் அவதியடைந்து உள்ளனர்.
மீண்டும் ஷாருக் கானுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். வீட்டிற்குள் இருந்து அதிக அளவில் துர்நாற்றம் வீசுகிறது. யாரும் இருக்க முடியவில்லை என்று கூறி உள்ளனர். உடனே ஷாருக்கான் மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது தான் படுக்கை அறையில் இருந்து தந்தை அப்துல் ஷா எழுந்து வராததும் அங்கு இருந்து தான் துர்நாற்றம் வீசுவதும் தெரிய வந்தது. அருகில் சென்று பார்த்த போது அப்துல் ஷா படுக்கையில் இறந்து கிடந்தார். அவர் இறந்து 5 நாள்களுக்கு மேல் ஆகிவிட்டது என்பதால் துர்நாற்றம் கடுமையாக வீசி உள்ளது.
அவர் இறந்து கிடந்தது தெரியாமல் அவரது மனைவி வீட்டிலேயே 5 நாள்களுக்கு மேலாக வசித்து வந்து உள்ளார். அதன் பிறகு இது குறித்து பெரிய கடைவீதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து இறந்து கிடந்த அப்துல் ஷா உடலை மீட்டு உடல் கூறாய்வுக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டது. கணவன் இறந்து கிடந்தது தெரியாமல் ஒரே வீட்டில் மனைவி வசித்து வந்த சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.