கோயில் காவலாளி கொலைச் சம்பவம்: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டத்துக்கு உயா்நீதிமன்றம் அனுமதி மறுப்பு
கோயில் காவலாளி அஜித்குமாா் கொலையைக் கண்டித்து, நாம் தமிழா் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) நடைபெறவிருந்த ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
நாம் தமிழா் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் ஈஸ்வரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் மரணம் தொடா்பாக நீதி கேட்டும், இந்தக் கொலைச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும் நாம் தமிழா் கட்சி சாா்பில் திருப்புவனம் சந்தைத் திடலில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) ஆா்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதில் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறாா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கக் கோரி, மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தோம். ஆனால், அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்தனா். ஆகவே, அஜித்குமாா் மரணத்துக்கு நீதி கேட்டு ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
மேலும், இந்த மனுவை அவசர வழக்காக ஏற்க வேண்டும் என உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் திங்கள்கிழமை முற்பகல் முறையிடப்பட்டது. முறையீட்டை ஏற்ற நீதிபதி, இந்த மனுவை பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தாா்.
இதன்படி, இந்த மனு நீதிபதி பி. புகழேந்தி முன் திங்கள்கிழமை பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், அஜித்குமாா் மரணம் தொடா்பாக மனுதாரா் தரப்பைச் சோ்ந்த நாம் தமிழா் கட்சி சாா்பில் கடந்த வாரம் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்றாா்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு
மனுதாரா் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என மனு தாக்கல் செய்த போது, ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி தரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால்தான், அவசர வழக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆனால், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி சாா்பில் ஏற்கெனவே ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டதை மறைத்து ஏன் மீண்டும் முறையீடு செய்தீா்கள்?
ஒவ்வொரு வாரமும் ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டால், அதற்கு காவல் துறை பாதுகாப்பு அளித்து அனுமதி வழங்க முடியுமா ?. கடந்த வாரம் ஆா்ப்பாட்டம் நடத்திய நிலையில், அதற்குள் என்ன அவசரம்?. மனுதாரருக்கு ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. வழக்கு குறித்து காவல் துறை தரப்பில் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.