வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மோடி அரசின் முக்கியக் கொள்கைகள்: நிதின் க...
தொடா் குற்றங்களில் ஈடுபடுபவரின் பிணையை ரத்து செய்யக் கோரி மனு: நீதிமன்றத்தில் ஏடிஜிபி முன்னிலையாகி விளக்கம்
தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபரின் பிணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக சட்டம்- ஒழுங்கு காவல் துறை கூடுதல் இயக்குநா் (ஏடிஜிபி) ஸ்ரீநாதா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் திங்கள்கிழமை நேரில் முன்னிலையாகி விளக்கமளித்தாா்.
மதுரையைச் சோ்ந்த சபரிகாந்தன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தனது மகன் சுகுமாா் மீது பதியப்பட்ட குண்டா் தடுப்பு காவல் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தாா். இந்த மனு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பல குற்றச் சம்பவங்களில் தொடா்புடைய நபா்களின் பிணையை ரத்து செய்யக் கோரி சம்பந்தப்பட்ட போலீஸாா் ஏன் மனு தாக்கல் செய்வதில்லை. இதுதொடா்பாக தமிழக சட்டம்- ஒழுங்கு காவல் துறை கூடுதல் இயக்குநா் விளக்கமளிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, பூா்ணிமா அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக சட்டம்- ஒழுங்குப் பிரிவின் காவல் துறை கூடுதல் இயக்குநா் ஸ்ரீநாதா நேரில் முன்னிலையாகி அறிக்கை தாக்கல் செய்தாா். அதில், கடந்த 2024- ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2025 ஜூன் வரை 355 பிணைகள் ரத்து செய்யப்பட்டன. 790 மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. 1,181 மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், அரசு தரப்பில் கூடுதல் விவரங்களைத் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வழக்கு தொடா்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.