பாகிஸ்தைன் போலியோ தடுப்பு முகாம்: குண்டுவெடிப்பில் 3 வீரா்கள் உயிரிழப்பு
கண்ணீர் புகைக்குண்டு வீசியதில் காங்கிரஸ் வழக்குரைஞர் பலி!
அஸ்ஸாமில் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தில் கண்ணீர் புகைக்குண்டுகளால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு காங்கிரஸ் வழக்குரைஞர் பலியானார்.
மணிப்பூரில் அமைதியின்மை, அதானி வணிக நிறுவனத்தின் மீதான லஞ்சக் குற்றச்சாட்டுகள், அஸ்ஸாமில் ஸ்மார்ட் மீட்டர்கள் நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அஸ்ஸாமில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை (டிச. 18) ராஜ் பவன் கெராவ் என்ற பேரில் நாடுதழுவிய போராட்டம் நடத்தினர்.
சுமார் 1000 பேர் பங்கேற்றிருந்த போராட்டத்தை அனுமதி கோராமல் நடத்தியதாகக் கூறி, அவர்களைத் தடுக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இந்த நிலையில், காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, காங்கிரஸ் சட்டப் பிரிவு உறுப்பினர் வழக்கறிஞர் மிருதுல் இஸ்லாம் (45) உயிரிழந்ததாக காங்கிரஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பேடாப்ரத் போரா கூறியதாவது, ``கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டதில் இஸ்லாமுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரை மருத்துவமனையில் அனுமதித்தும், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். மேலும், சுமார் 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு கோரிக்கை மனுவை அளிக்கக் கூடிய போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக, இவ்வளவு பெரிய மற்றும் இரக்கமற்ற காவல்படையை கண்டதேயில்லை’’ என்று தெரிவித்தார். இருப்பினும், அவர்களின் குற்றச்சாட்டை காவல்துறையினர் மறுத்துள்ளனர்.
குவஹாட்டி காவல் ஆணையர் கூறுவதாவது, ``அனுமதி இல்லாமல் 1000 பேர் போராட்டம் நடத்தினர். அதுமட்டுமின்றி, தடியடியோ தாக்குதலோ எதுவும் நடத்தப்படவில்லை. நாங்கள் கண்ணீர் புகைக்குண்டுகளை சாலையில்தான் வீசினோம்; யார்மீதும் வீசவில்லை. மேலும், அவரது உடற்கூறாய்வு அறிக்கை வந்தவுடன்தான், அவரது இறப்பு குறித்து உண்மை தெரிய வரும்’’ என்று தெரிவித்தார்.
இருப்பினும், போராட்டத்திற்கு காவல்துறையிடம் அனுமதி கோரிய, கையொப்பமிடப்பட்ட கடிதத்தின் நகலையும் காங்கிரஸார் சமர்ப்பித்தனர்.