ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கோரி மனு!
கத்தாரில் தாக்குதல்! அரபு நாடுகளையும் குறிவைக்கிறதா இஸ்ரேல்?
காஸாவில் நீடிக்கும் சண்டையைத் தொடர்ந்து, கத்தார் தலைநகரில் எவ்வித முன்னறிவிப்புமின்றி செவ்வாய்க்கிழமை(செப். 9) இஸ்ரேல் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.
கத்தார் தலைநகர் தோஹாவில் செப். 9 வான் வழியாக தீவிர தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது. தோஹாவில் ஹமாஸ் படையின் அரசியல் பிரிவு தலைமை நிர்வாகிகள் வசிக்கும் குடியிருப்பு கட்டடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் வான் வழியாக திடீரென தாக்குதல் நடத்தியது.
இதனைத் தொடர்ந்து, கத்தார் மக்களின் பாதுகாப்புக்கு இஸ்ரேல் படைகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக எதிர்வினையாற்றிய கத்தார் அரசு இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, செவ்வாய்க்கிழமை(செப். 9) நள்ளிரவில் அமெரிக்கா தரப்பிலிருந்து அளிக்கப்பட்டதொரு விளக்கத்தில், அமெரிக்காவுக்கு முன்கூட்டியே இத்தாக்குதல் பற்றி இஸ்ரேல் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுவிட்டதாக வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் கரோலின் லியாவிட் தெரிவித்து சர்வதேச சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்த தவறவில்லை.
இந்த நிலையில், அடுத்தகட்டமாக அரபு நாடுகளுக்கு எதிராகவும் இஸ்ரேல் திரும்புகிறதா? என்பதற்கு இஸ்ரேல் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அவைக்கான இஸ்ரேலின் தூதர் பேசுகையில், கத்தாரில் ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கையானது சரியான முடிவே என்று வாதிட்டுள்ளார்.
அவர் பேசுகையில், “இந்தத் தாக்குதலானது கத்தார் மீதான தாக்குதல் அல்ல. ஹமாஸ் மீதான தாக்குதலே. நாங்கள்(இஸ்ரேல்) கத்தாருக்கு எதிரானவர்கள் அல்ல, அதுபோல, எந்தவொரு அரபு தேசத்துக்கும் எதிரானவர்கள் அல்ல, நாங்கள் தற்போதையை சூழலில் ஒரு பயங்கரவாத அமைப்புக்கு(ஹமாஸ் படை) எதிராகவே செயல்படுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.