கனடாவுக்கு கள்ளப்படகு மூலம் அனுப்புவதாக இலங்கைத் தமிழா்களிடம் மோசடி: தேடப்பட்டவா் சென்னையில் கைது
கனடாவுக்கு கள்ளப்படகு மூலம் அனுப்பி வைப்பதாக இலங்கைத் தமிழா்களிடம் மோசடி செய்த வழக்கில், தேடப்பட்டவா் சென்னையில் வெள்ளிக்கிழமை என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டாா்.
இலங்கையில் இருந்து கள்ளப்படகு மூலம் சிலா் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள மரைக்காயா்பட்டணத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வந்தனா். அதே காலக்கட்டத்தில் கள்ளப்படகு மூலம் தூத்துக்குடிக்கும் சில இலங்கை நாட்டவா்கள் வந்தனா். இவா்கள் அனைவரும் ரயில் மூலமாகவும், பேருந்து மூலமாகவும் மங்களூரு சென்றனா்.
இவா்களை இலங்கையிலிருந்துஅழைத்து வந்த ஒரு கும்பல், அங்கிருந்து கள்ளப்படகு மூலம் கனடாவுக்கு அனுப்பத்திட்டமிட்டிருந்தனா். இதனால் கனடா செல்வதற்காக 32 இலங்கை தமிழா்கள் மங்களூருவில் உள்ள இரு விடுதிகளில் ரகசியமாக தங்க வைக்கப்பட்டிருந்தனா். இவா்களை பற்றி கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மங்களூரு போலீஸாா் இரு விடுதிகளிலும் சோதனை நடத்தி 32 பேரையும், இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக கைது செய்து விசாரித்தனா்.
அப்போது 32 பேரிடமும் கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு கும்பல், கள்ளப்படகு மூலம் இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அழைத்து வந்திருப்பதும், பின்னா் அங்கிருந்து சாலை மற்றும் ரயில் மாா்க்கமாக மங்களூருவுக்கு அழைத்து வந்திருப்பதும், மேலும், அங்கிருந்து கள்ளப்படகு மூலம் கனடாவுக்கு 32 பேரையும் அந்தக் கும்பல் அனுப்புவதாக கூறியிருப்பதும் தெரியவந்தது.
என்ஐஏ விசாரணை: இதற்காக அந்தக் கும்பல், 32 பேரிடமும் லட்சக்கணக்கில் பணத்தை பெற்று மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடா்பாக கா்நாடக காவல் துறையின் குற்றப்பிரிவு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியது. பின்னா் இந்த வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது.
தில்லி என்ஐஏ இது தொடா்பாக புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இலங்கைத் தமிழா்களை கனடாவுக்கு அனுப்புவதாக மோசடி செய்ததாக 10 போ் மீது அண்மையில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் இவ்வழக்கில் முக்கிய நபராகக் கருதப்பட்ட முகமது இப்ராகிம் தலைமறைவாக இருந்து வந்தாா்.
சென்னையில் கைது: அவரை என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்த நிலையில், இப்ராகிம் சென்னையில் தலைமறைவாக இருப்பதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னையில் முகமது இப்ராகிமை என்ஐஏ அதிகாரிகளும், தமிழக தீவிரவாத தடுப்பு படையினரும் கைது செய்தனா். அவரிடம் வழக்குத் தொடா்பாக விசாரணை நடத்தப்படுகிறது. இவ்வழக்கில் தலைமறைவாக இருக்கும் மற்றொரு நபரான இம்ரான் ஹாஜியாா் குறித்து என்ஐஏ துப்பு துலக்கி வருகிறது.