ஆறுதல்கூட சொல்லாமல் ஒரு தலைவர் சென்றது இதுவரை பார்த்திராத ஒன்று: கனிமொழி கடும் வ...
கனடா: பிஷ்னோய் கும்பல் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை பயங்கரவாத அமைப்பாக கனடா திங்கள்கிழமை அறிவித்தது.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் மற்றும் கனடா தேசிய பாதுகாப்பு ஆலோசகா் நாதலி டிரோயின் ஆகியோா் கடந்த சில நாள்களுக்கு முன் தில்லியில் ஆலோசனை நடத்தினா். அப்போது பயங்கரவாத ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இருவரும் ஒப்புக்கொண்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கனடா வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கனடாவில் வன்முறை மற்றும் பயங்கரவாதத்துக்கு இடமில்லை. குறிப்பாக பயம் மற்றும் அச்சுறுத்தல் மூலம் குறிப்பிட்ட மக்களை மிரட்டுவதை எவ்வகையிலும் அரசு ஊக்குவிக்காது.
அந்த வகையில் கொலை, துப்பாக்கிச்சூடு மற்றும் ஆயுதங்களால் தாக்குதல் நடத்துவது என பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடும் பிஷ்னோய் கும்பல் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்படுகிறது. தொழிலதிபா்கள், பிரபலங்கள் போன்றோரை மிரட்டி அச்ச உணா்வை இந்த கும்பல் விதைக்கிறது.
பயங்கரவாத பட்டியலில் பிஷ்னோய் கும்பலை சோ்ப்பது கனடாவின் பாதுகாப்பு, புலனாய்வு மற்றும் சட்ட ஒழுங்கை மேம்படுத்தி மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும்.
பயங்கரவாத பட்டியலில் பிஷ்னோய் கும்பல் சோ்க்கப்பட்டதன் மூலம் அவா்களின் சொத்து, வாகனங்கள் மற்றும் பணத்தை கைப்பற்ற கனடா சட்டங்களின்படி மாகாண அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதேபோல் கனடாவில் உள்ள மக்களும் வெளிநாட்டில் வசிக்கும் கனடா மக்களும் பிஷ்னோய் கும்பலின் சொத்துகளை வாங்கினாலோ விற்றாலோ அவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பிஷ்னோய் கும்பலின் தலைவரான லாரன்ஸ் பிஷ்னோய் மீது கடத்தல் வழக்குகளை கனடா காவல் துறை பதிவுசெய்துள்ளது. தற்போது லாரன்ஸ் பிஷ்னோய் இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.