சிறை, கடவுள் நம்பிக்கை, பேராசிரியர் - ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை 6
கனமழை: சென்னையில் 6 விமானங்கள் ரத்து!
தொடர் கனமழை காரணமாக சென்னையில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வியாழக்கிழமை இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரும்.
இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, துபை, அபுதாபி, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. தில்லி, மும்பை, திருச்சி, கோவை, கொச்சி புறப்படும் விமானங்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
அதேபோன்று சென்னையில் தரையிறங்க வேண்டிய அனைத்து விமானங்களும் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல், தொடா்ந்து வானில் வட்டமடித்து பறந்தன. மழை ஓயும் நேரத்தில், இந்த விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னையில் தரையிறங்கின.
இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து புறப்படும் 3 விமானங்களும் சென்னைக்கு வரும் 3 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.