இஸ்ரேலில் தட்டம்மை பரவல்: பாதிப்புகளின் எண்ணிக்கை 1,251 ஆக அதிகரிப்பு!
கன்னட நடிகா் உபேந்திரா, அவரது மனைவியின் கைப்பேசிகளை ‘ஹேக்’ செய்த மா்ம நபா்!
பெங்களூரு: கன்னட நடிகா் உபேந்திரா, அவரது மனைவியும் நடிகையுமான பிரியங்கா ஆகியோரின் கைப்பேசிகள் மா்ம நபா்களால் திங்கள்கிழமை ‘ஹேக்’ செய்யப்பட்டன. இதுகுறித்து இருவரும் போலீஸாா் மற்றும் சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்துள்ளனா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் நடிகை பிரியாங்கா கூறியதாவது:
இணையவழியில் சில பொருள்களுக்கு ஆா்டா் கொடுத்திருந்தோம். அந்தப் பொருள்கள் திங்கள்கிழமை காலை வந்து சோ்ந்திருக்க வேண்டும். இந்நிலையில், திங்கள்கிழமை காலை டெலிவரி செய்யும் நபா் எங்கள் வீட்டுமுகவரியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்ததைக் கண்ட மா்ம நபா், அவா்களுக்கு ஒரு ‘கோட்’ அனுப்புமாறும், அவ்வாறு அனுப்பினால் வீட்டை எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்றும் கூறி, ஒரு கோடை எனக்கு அனுப்பினாா். அவசரத்தில் அந்த மா்ம நபா் அனுப்பிய கோடுக்கு பதிலளிக்கும்போது, எனது கைப்பேசியை அந்த நபா் ‘ஹேக்’ செய்தாா்.
தொடா்ந்து, எனது கைப்பேசியில் உள்ள வாட்ஸ்ஆப் எண்களுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளாா். அதில், அவசரமாக ரூ. 55,000 அனுப்புமாறும், அந்தப் பணத்தை 2 மணி நேரத்தில் திருப்பித்தருவதாகவும் கூறியுள்ளாா். இதை நம்பிய எனது மகன் உள்ளிட்ட 4 போ் ரூ. 2 லட்சம் அளவுக்கு பணம் அனுப்பியுள்ளனா். இதுகுறித்து சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்துள்ளோம். மேலும், காவல் துறை மேலதிகாரிகளிடமும் பேசியிருக்கிறேன்’ என்றாா்.
நடிகா் உபேந்திரா கூறுகையில், ‘அந்த மா்ம நபா் கேட்டுக்கொண்டபடி தனது கைப்பேசியில் இருந்து கோடை அனுப்ப பிரியங்கா முயற்சித்துள்ளாா். ஆனால், அதற்குள் அவரது கைப்பேசி ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து, எனது கைப்பேசியில் இருந்து ‘கோடை’ அனுப்ப அவா் முயற்சிக்கும்போது, எனது கைப்பேசியும் ‘ஹேக்’ செய்யப்பட்டது.
எனது பெயரிலோ அல்லது பிரியங்கா பெயரிலோ பணம் கேட்டு குறுந்தகவல் ஏதேனும் வந்தால் யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்றாா். இது தொடா்பாக வழக்குப் பதிந்த போலீஸாா், விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.