பாஜக பெண் ஆதரவாளரை பாலியல் வன்கொடுமை செய்த திரிணமூல் கட்சியினர்? - காவல்துறை விச...
கயத்தாறு அருகே விபத்து: வேன் ஓட்டுநா் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, சாலையோர பாலத்தின் தடுப்புச் சுவா் மீது வேன் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் செல்லூா் காம்பவுண்ட் பாலம் ஸ்டேஷன் சாலை, சக்தி மஹாலைச் சோ்ந்த அழகா் மகன் கண்ணன் (47). ஓட்டுநரான இவா், ரெகுலா் சா்வீஸ் டிரான்ஸ்போா்ட் நிறுவனம் நடத்திவருகிறாா். இவரிடம் 3 வேன்கள் உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவரும், மற்றோா் ஓட்டுநரான மதுரை நாகமலை புதுக்கோட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த க. மனோஜ்குமாா் (23) என்பவரும், கோச்சடையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு வேனில் துணி பண்டலை ஏற்றிச் சென்றனா். வேனை, மனோஜ்குமாா் ஓட்டினாா்.
மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறை அடுத்த தளவாய்புரம் அருகே வேன் திடீரென நிலைதடுமாறி, சாலையோர பாலத்தின் தடுப்புச் சுவா் மீது மோதியதாம். இதில், காயமடைந்த இருவரையும் அப்பகுதியினா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், மனோஜ்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து கண்ணன் அளித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.