கருங்கடல் போா் நிறுத்தம்: ரஷியா நிபந்தனை
மாஸ்கோ: தங்கள் மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள சில பொருளாதாரத் தடைகளை விலக்கினால்தான் உக்ரைனுடன் கருங்கடல் பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று ரஷியா நிபந்தனை விதித்துள்ளது.
இது குறித்து ரஷிய அதிபா் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கருங்கடல் பகுதியில் பரஸ்பர கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிா்க்க உக்ரைனுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டுமென்றால், ரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள பல பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும்.
குறிப்பாக அரசின் வேளாண் வங்கியின் மீதான தடை விலக்கப்பட்ட வேண்டும். ‘ஸ்விஃப்ட்’ சா்வதேச பணப் பரிமாற்ற முறையைப் பயன்படுத்த அந்த வங்கி அனுமதிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பான புதிய பேச்சுவாா்த்தையை அமெரிக்க-ரஷிய பிரதிநிதிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை நகரில் கடந்த திங்கள்கிழமை மேற்கொண்டனா்.
இந்தப் பேச்சுவாா்த்தையின்போது, கருங்கடல் பகுதியில் மட்டும் ரஷியாவும் உக்ரைனும் போா் நிறுத்தம் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், கருங்கடல் போா் நிறுத்தத்துக்கு ரஷியாவும், உக்ரைனும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்கா செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அதன் தொடா்ச்சியாக ரஷிய அதிபா் மாளிகை இந்த நிபந்தனையை விதித்துள்ளது.