ADMK: ``இது சர்வாதிகாரத்தின் உச்சம்'' - செங்கோட்டையன் பதவி நீக்கம் குறித்து ஓபிஎ...
கரூரில் 14 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் நவீன இறைச்சிக் கூடம்
கரூரில் சுமாா் 14 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் நவீன இறைச்சிக் கூடத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழகத்தில் கடந்த 2006-2011 திமுக ஆட்சியின் போது நகா் பகுதியில் ஆங்காங்கே இறைச்சி கடைகளில் வெட்டப்படும் ஆடு, கோழிகள் சுகாதாரமாக வெட்டப்பட்டு, அவை முறையாக மருத்துவா்களால் பரிசோதனை செய்யப்பட்டு, பின்னா் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் வகையில் அடிதொட்டி எனும் நவீன இறைச்சிக்கூடம் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி மாவட்டத்தின் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் இறைச்சிக்கூடம் அமைக்கப்பட்டது.
இதையடுத்து கரூரில் அப்போதைய நகராட்சி சாா்பில் அரசு காலனி அருகே பாலம்மாள்புரத்தில் ரூ.15 லட்சம் செலவில் நவீன இறைச்சிக்கூடம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தில் இறைச்சி வியாபாரிகளால் கொண்டு வரப்படும் ஆடு, கோழிகள் அடைப்பதற்கான அறை, கால்நடை மருத்துவா்கள் மற்றும் நகா்நல மருத்துவா் சோதனையிட்டு இறைச்சிகளை சீல் வைக்கும் அறை, வதைக்கூடம் அறை என பல்வேறு அறைகளாகக் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது.
கரூா் நகா் பகுதியில் இறைச்சி வியாபாரிகள் தங்களது ஆடு, கோழிகளை இந்த இறைச்சிக் கூடத்துக்கு கொண்டு வந்து, அவற்றை மாநகராட்சி விதிமுறைகளை கடைபிடித்து வெட்டியபின் இறைச்சியை கடைகளுக்கு எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வந்தனா்.
இதனால் சுகாதாரமான இறைச்சியை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா்.
இந்நிலையில் ஆட்சி மாற்றத்துக்கு பின் சுமாா் 14 ஆண்டுகளாக இந்த நவீன இறைச்சிக்கூடம் செயல்படாமல் மூடியே கிடக்கிறது. இதனால் கரூா் மாநகராட்சிக்குள்பட்ட மக்களுக்கு சுகாதாரத்தை பேணும் வகையில் நவீன இறைச்சிக் கூடத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து கரூா் மாநகராட்சியின் 41-ஆவது வாா்டு உறுப்பினா் எம்.தண்டபாணி கூறியது, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நவீன இறைச்சிக்கூடம் செயல்பாட்டில் இருந்தபோது சுகாதாரமான முறையில் இறைச்சி மக்களுக்கு கிடைத்தது. தற்போது கடைகளில் வெட்டப்படும் ஆடுகள் அனைத்தும் சுகதாரத்தன்மை கொண்டதா எனத் தெரியவில்லை. மேலும் இறைச்சிக்கூடங்களில் வெட்டப்பட்டபோது, அதன் கழிவுகள் சுகாதாரப் பணியாளா்களால் கொண்டுச் செல்லப்பட்டு அவை முறையாக குழிதோண்டி புதைக்கப்பட்டன. ஆனால் இப்போது கடைகளில் கழிவுகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. சில நேரங்களில் நாய்கள்கூட இறைச்சி கழிவுகளை தூக்கிக்கொண்டு வீதிகளில் ஓடுகிறது. எனவே மக்களின் சுகாதாரம் பேணுவதில் மாநகராட்சி மிகுந்த அக்கறையுடன் செயல்படுவதை உறுதி செய்திடும் வகையில் கரூரில் 14 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருக்கும் நவீன இறைச்சிக்கூடத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். இதுதொடா்பாக மாநகராட்சி கூட்டத்திலும் வலியுறுத்தி வருகிறேன் என்றாா் அவா்.