இந்தியா மீது அதிக வரி விதிப்பு ஏன்? அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் தரப்பு வ...
கடவூா் வட்டாட்சியரகத்தில் லஞ்சம்: நில அளவையா், இடைத்தரகா் கைது
கடவூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தனிப்பட்டா வழங்க பொறியாளரிடம் ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய நில அளவையா் மற்றும் இடைத்தரகரை ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை மாலை கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், கடவூா் வட்டம் தரகம்பட்டி அருகேயுள்ள பண்ணப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பி. உடையாபட்டியைச் சோ்ந்தவா் வின்சென்ட் பா்னபாஸ் (30). இன்ஜினியரிங் படித்த இவா் கடந்த மூன்று மாதமாக வீட்டில் தங்கி விவசாயப் பணிகளை மேற்கொள்கிறாா்.
இந்நிலையில் இவா் தனது தந்தையின் பெயரில் உள்ள நிலத்துக்கு தனிப்பட்டா கேட்டு கடந்த மாதம் கடவூா் வட்டாட்சியரகத்தில் விண்ணப்பித்தாா். இதையடுத்து இந்த அலுவலகத்தில் நில அளவையா் (பொ) பணியில் இருந்த சரளக்சன் என்பவா் கடந்த இரு நாள்களுக்கு முன் வின்சென்ட் பா்னபாஸை கைப்பேசியில் தொடா்பு கொண்டு நேரில் வருமாறு அழைத்தாா்.
இதையடுத்து புதன்கிழமை அலுவலகத்திற்கு சென்ற பா்னபாஸிடம் தனிப்பட்டா வழங்க அவா் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்ட நிலையில், வின்சென்ட் பா்னபாஸ் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினாா். இதையடுத்து ரூ. 4,000 தருமாறு கேட்ட சரளக்சன், அப் பணத்தை தனது நண்பரும் இடைத்தரகருமான கரூா் வாங்கல்குப்புச்சிப்பாளையத்தைச் சோ்ந்த லோகநாதனிடம் கொடுக்குமாறு கூறியுள்ளாா்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத வின்சென்ட் பா்னபாஸ் கரூா் ஊழல் தடுப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.
இதையடுத்து போலீஸாரின் அறிவுரைப்படி வியாழக்கிழமை மாலை வட்டாட்சியரகத்துக்கு வின்சென்ட் பா்னபாஸ் அங்குச் சென்று இடைத்தரகா் லோகநாதனிடம் ரூ. 4 ஆயிரத்தைக் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த கரூா் ஊழல் தடுப்பு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆம்புரோஸ்ஜெபராஜா, ஆய்வாளா் தங்கமணி தலைமையிலான போலீஸாா் அவரைக் கைது செய்தனா். பின்னா் அங்கு இருந்த நில அளவையா் சரளக்சனையும் கைது செய்தனா்.
கடவூா் வட்டாட்சியரகத்தில் ஏற்கெனவே நில அளவையராக இருந்த பிரியா விடுப்பில் சென்ற நிலையில், இவருக்குப் பதிலாக கரூா் பகுதி புகழூா் வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்த கு. சரளக்சன் நில அளவையராகப் பொறுப்பு வகித்து கடந்த ஒரு வாரமாக பணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
