காவல், தீயணைப்பு நிலையங்களுக்கு மாணவா்கள் பயணம்
கரூா் மாவட்டம் புகழூரில் காவல் நிலையம், தீயணைப்பு நிலையங்களின் அன்றாட பணிகள் குறித்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை கேட்டறிந்தனா்.
கரூா் மாவட்டம் புன்னம் பகுதியில் செயல்படும் அரசுப் பள்ளி மாணவா்கள் வியாழக்கிழமை காலை புகழூா் தீயணைப்பு நிலையத்திற்கு சென்று, அங்கு தீயணைப்பு நிலை அலுவலா் திருமுருகனிடம் தீயணைப்பு நிலையத்தின் தினசரி செயல்பாடுகள் குறித்தும், தீயணைக்க எவ்வாறு அழைப்புகள் வரும் என்பதைக் கேட்டறிந்தனா். இதேபோல புகழூா் அஞ்சல் நிலையத்திற்கு சென்ற மாணவ ,மாணவிகள் அங்கு தினசரி பதிவு செய்யப்படும் தபால்கள், அவை அனுப்பப்படும் விதம், அனுப்பப்படும் தபால்கள் எத்தனை நாட்களில் சம்பந்தப்பட்ட நபா்களுக்கு கிடைக்கும் என்பது குறித்துக் கேட்டறிந்தனா். அதேபோல் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்திற்குச் சென்ற மாணவ ,மாணவிகள் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தனா். நிகழ்வின்போது மாணவா்களுடன் பள்ளி ஆசிரியா்களும் உடனிருந்தனா்.