கரூர் அருகே தண்டவாளத்தில் விரிசல்: 3 ரயில்கள் தாமதம்!
கரூர்: கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால் 3 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பின்னர் தாமதமாக இயக்கப்பட்டன.
கரூர் - திருச்சிராப்பள்ளி ரயில் பாதையில் மாயனூரை அடுத்த கிருஷ்ணராயபுரம் அருகில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் கலியமூர்த்தி என்பவர் ரயில் பாதையை கடந்து வாய்க்காலுக்கு செல்லும்போது தண்டாவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதை பார்த்துள்ளார்.
உடனடியாக தண்டாவாளத்தை பராமரிக்கும் பணியில் ஈடுபடும் ஊழியரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே அதிகாரிகளும், ஊழியர்களும் அதனை விரைவாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க : ரூ.200 நோட்டும் திரும்பப் பெறப்படுமா? என்ன சொல்கிறது ஆர்பிஐ?
அப்போது, அந்த வழியாக வந்த காரைக்கால் விரைவு ரயில் சீரமைக்கும் இடத்திற்கு அருகிலும், வாஸ்கோடகாமா - வேளாங்கன்னி விரைவு மாயனூர் ரயில் நிலையத்திலும், கரூர் - திருச்சி பயணிகள் ரயில் பாதி வழியிலும் நிறுத்தப்பட்டன.
சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக தண்டாவாளம் சீரமைக்கப்பட்ட பிறகு ரயில்கள் புறப்பட்டுச் சென்றன. ரயில்வே பாதையில் ஏற்பட்ட விரிசல் உடனடியாக கண்டு பிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-11/ccrlhdw9/0463fa46-e0fe-4332-9adf-f7366cf1a69e.jpg)
கடந்த மாதம் கரூர் - திண்டுக்கல் ரயில் பாதையில் மர்ம நபர்கள் இரும்பு துண்டு வைத்து தண்டாவாளத்தை சேதப்படுத்திய நிலையில், இன்று தண்டாவாளத்தில் விரிசல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.