கரூர் பலி: பிரதமர் மோடி இரங்கல்
கரூரில் அரசியல் பேரணியில் நிகழ்ந்த துரதிருஷ்டமான சம்பவம் வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கரூரில் அரசியல் கூட்டத்தின்போது ஏற்பட்டுள்ள துரதிருஷ்டமான சம்பவம் வருத்தமளிக்கிறது. காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். தங்கள் அன்புக்குரியோரை இழந்து வாடுவோருக்கு விலிமை கிடைக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
2026 சட்டப்பேரவை தோ்தலையொட்டி, விஜய் கடந்த 13-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறாா். இந்த நிலையில் இன்று நடந்த விஜய்யின் கரூர் பிரசாரத்தின்போது திடீரென கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 31 பேர் பலியானதாக கூறப்படுகிறது.
கரூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் வரவழைப்பு!
கூட்டத்தில் மயக்கமடைந்த 40க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் விரைந்தனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு நிலவுகிறது. இதனிடையே கரூர் மாவட்ட ஆட்சியரிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.