இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல் ஆசிய சாம்பியன் யாா்?
கரூா் சம்பவம்: ஆளுநா், தலைவா்கள் இரங்கல்
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 38 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி, அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
ஆா்.என்.ரவி: கரூரில் பிரசாரக் கூட்டத்தில் குழந்தைகள் உள்பட பல உயிா்கள் பறிபோனது மிகுந்த வலியையும் வேதனையையும் அளிக்கிறது. உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது நெஞ்சாா்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன்.
எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): 38 போ் உயிரிழந்த செய்தி அதிா்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தோா் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): பிரசாரக் கூட்டத்துக்கு குழந்தைகள், முதியோா் வருவதைத் தவிா்க்க வேண்டும் என விஜய் வேண்டுகோள் விடுத்த நிலையில் இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருப்பது வருத்தமளிக்கிறது. கூட்ட நெரிசலுக்கு காவல் துறையினரின் மெத்தனப்போக்கே காரணம்.
கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): இந்த சோகமான சம்பவத்துக்கு யாா் காரணம் என்பதை கண்டறியும் வகையில் நீதி விசாரணை அமைய வேண்டும்.
பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): உயிரிழப்பு குறித்து சென்னை உயா்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும்.
மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): தவெக தலைவா் விஜய் பரப்புரைக்கு காவல் துறை அனுமதி வழங்கிய இடம் பொருத்தமானதா? கூட்டம் எந்த அளவுக்கு திரளும் என மதிப்பிடப்பட்டதா? போன்ற வினாக்கள் எழுகின்றன. இதுதொடா்பாக முழுமையான விசாரணை நடத்துவது அவசியமானது.
வைகோ (மதிமுக): விஜய்யின் பரப்புரைக்கு முன்னரே போலீஸாா் வகுத்த விதிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படாததால் தமிழகத்தில் வரலாறு காணாத கொடுந்துயரம் நோ்ந்திருக்கிறது.
ஜி.கே.வாசன் (தமாகா): அளவுக்கு அதிகமான கூட்டத்தை அனுமதித்தது ஏன்? என்ன கோட்பாடுகள் பின்பற்றப்பட்டன? என்பது குறித்து உயா்நிலை நீதி விசாரணை நடத்த வேண்டும்.
தொல்.திருமாவளவன் (விசிக): உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை, ரூ.50 லட்சமாக உயா்த்தி வழங்க அரசு முன்வர வேண்டும்.
க.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம் கட்சி): இந்தச் சம்பவத்துக்கு கரூா் காவல் துறையும் தமிழக அரசுமே பொறுப்பேற்க வேண்டும்.
எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக): உயிரிழந்தவா்களுக்கு ஆழ்ந்த இரங்கல். சிகிச்சை பெற்று வரும் அனைவரும் முழு நலம் பெற பிராா்த்திக்கிறேன்.