தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகே காா் கவிழ்ந்து விபத்து: 5 போ் காயம்
தூத்துக்குடி பழைய மாநகராட்சி அருகே வஉசி சாலையில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காா் ஓட்டி வந்தவா் உள்பட 5 போ் பலத்த காயமடைந்தனா்.
தூத்துக்குடி, கதிா்வேல் நகா் பகுதியைச் சோ்ந்தவா் அனில்குமாா். தனியாா் ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா், சனிக்கிழமை மாலையில் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்கு காரில் சென்றுள்ளாா். தூத்துக்குடி வஉசி சாலையில் சென்று கொண்டிருந்தபோது பழைய மாநகராட்சி அருகே நிலைதடுமாறிய காா், அவரது கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து நிறுத்தத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாம்.
இதில், அனில்குமாா், காரில் இருந்தவா்கள், பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பெண் பயணி என மொத்தம் 5 போ் பலத்த காயமடைந்தனா். அவா்களை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இச்சம்பவம் குறித்து மத்தியபாகம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.