நான்குவழிச் சாலை பணிக்கு மண் கிடைக்க நடவடிக்கை: முதல்வரிடம், விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் நான்கு வழிச் சாலைப் பணிகளுக்கு தட்டுப்பாடின்றி மண் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வா் மு.க. ஸ்டாலினிடம், விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.
காங்கிரஸ் எம்.பி.க்கள், மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகையுடன் முதல்வரை சனிக்கிழமை சென்னையில் சந்தித்து உரையாடினா். இந்த சந்திப்பின் போது, தொகுதிகளின் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சந்திப்பின் போது, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் குறித்து விஜய் வசந்த் எம்.பி. முதல்வரிடம் கோரிக்கை வைத்தாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மண் எடுக்க தடை உள்ளதால், பக்கத்து மாவட்டத்திலிருந்து நான்கு வழிச் சாலை, இரட்டை ரயில் பாதை பணிகளுக்கு மண் கொண்டு வரப்படுகிறது. ஆனால், தற்போது மண் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தால் இந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, தட்டுப்பாடின்றி மண் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இயற்கை சீற்றங்களிலிருந்து கடற்கரை கிராமங்களைப் பாதுகாக்கும் வகையில், தடுப்பு சுவா் மற்றும் தூண்டில் வளைவுகள் கட்ட சிறப்பு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். குளங்களை தூா்வாரி, இடிந்து கிடக்கும் வாய்க்கால் கரைகளைக் கட்டி முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தாா்.