காளி ஊா்வலத்துக்கு அனுமதி மறுப்பு: இந்து முன்னணி கண்டனம்
தூத்துக்குடியில் காளி ஊா்வலத்துக்கு அனுமதி மறுத்ததற்காக காவல்துறைக்கு இந்து முன்னணி சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தூத்துக்குடி மாநகா் மாவட்டத் தலைவா் எஸ். இசக்கி முத்துக்குமாா் வெளியிட்ட அறிக்கை: இந்து முன்னணி சாா்பில் நடைபெறும் தசரா நவராத்திரி திருவிழா உற்சவத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை மாலை இசக்கி அம்மன் கோயில் முன்பிருந்து சிவன் கோயில் வரை காளி ஊா்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாவட்ட காவல் துறையிடம் உரிய அனுமதி கேட்டிருந்த நிலையில், திட்டமிட்டபடி காளி ஊா்வலத்துக்காக தயாராக இருந்தபோது, கடைசி நேரத்தில் காவல் துறை அனுமதி மறுத்து பதில் அளித்திருப்பது வேதனை அளிக்கிறது.
தூத்துக்குடியில் இந்து எழுச்சிக்காக நடத்தப்படும் ஒவ்வொரு விழாவிலும் இந்து முன்னணி மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தும், அனுமதியை மறுத்தும் நடவடிக்கை மேற்கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.