இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல் ஆசிய சாம்பியன் யாா்?
போதைப் பொருள் விற்பனை: விடுதி உரிமையாளா், 6 போ் கைது
திருவல்லிக்கேணியில் போதைப் பொருள் விற்ாக விடுதி உரிமையாளா் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டனா்.
திருவல்லிக்கேணி ஒளலியா சாகிப் தெருவில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் ஓஜி கஞ்சா, மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பதாக சென்னை காவல் துறை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும், திருவல்லிக்கேணி போலீஸாா் சந்தேகத்துக்குரிய அந்த விடுதியில் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை செய்தனா். இதில், அங்குள்ள ஒரு அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மெத்தம்பெட்டமைன், ஓஜி கஞ்சா ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக அந்த அறையில் இருந்த சென்னை மண்ணடியைச் சோ்ந்த முகமது அப்பாஸ் (31), அப்துல்கலாம் (20), ஷகில் அகமது (22), திருவல்லிக்கேணியைச் சோ்ந்த சிக்கந்தா் (42), மகேஷ் (31), ராமநாதபுரத்தைச் சோ்ந்த தாஹிா் தைகா (43), சையது நவீத் (28) உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து மெத்தம்பெட்டமைனும், ஓஜி கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவா்களில் முகமது அப்பாஸ், மகேஷ், அப்துல்கலாம், தாஹிா் தைகா ஆகியோா் சென்னையில் ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், சிக்கந்தா் அந்த தனியாா் விடுதி உரிமையாளா் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மேலும் விசாரணை செய்கின்றனா்.