காஸாவில் மக்கள் தஞ்சமடைந்த முகாம்களின் மீது இஸ்ரேல் தாக்குதல்! 16 பேர் பலி!
கரூர்: மருத்துவமனைக்குச் சென்றது முதல் மின்தடை வரை - விமர்சனங்கள் குறித்து செந்தில் பாலாஜி விளக்கம்
கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தில் திமுகவிற்கும், செந்தில் பாலாஜிக்கும் தொடர் இருப்பதாக தவெக குற்றம் சாட்டும் நிலையில், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார்.
"கரூரில் நடந்த சம்பவம் கொடுமையானது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நேரில் வந்து ஆறுதல் தெரிவித்த முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு நன்றி.
தமிழக அரசுடன் துணை நின்ற அனைத்துக் கட்சியினருக்கும், அமைப்பினருக்கும் நன்றி.
கரூர் துயர நிகழ்வை அரசியலாகப் பார்க்க விரும்பவில்லை. எந்த அரசியல் கட்சியின் கூட்டமாக இருந்தாலும் இனி இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கக்கூடாது.
இதனை அரசியலாக்க வேண்டாம். தவெக கேட்ட லைட் ஹவுஸ், உழவர் சந்தை பற்றி உங்களுக்கே தெரியும்.
லைட் ஹவுஸ் பகுதிக்கு அருகே பெட்ரோல் பங்க், அமராவதி ஆறு உள்ளது. அதுமட்டுமின்றி அந்தப் பகுதியில் 7000 பேர்தான் நிற்க முடியும்.
உழவர் சந்தை பகுதியில் 5000 பேர்தான் நிற்க முடியும். தவெக கேட்ட 3 இடங்களில் வேலுசாமிபுரத்தில் தான் அதிக பேர் நிற்க முடியும்.
தங்கள் கட்சிக்கு வரும் கூட்டத்தைக் கணக்கிட்டு அதற்கு ஏற்ப இடங்களைக் கேட்க வேண்டும்.
குறித்த நேரத்தில் வந்திருந்தால் பிரச்னை ஏற்பட்டிருக்காது. 41 பேர் உயிரிழப்பைப் பொறுப்புடன் அணுக வேண்டும்.
கரூரில் வந்த கூட்டத்தினருக்கு தவெகவினர் தண்ணீரோ, பிஸ்கட்டோ கொடுக்கவில்லை.
கூட்ட நெரிசலில் தள்ளப்பட்ட மக்கள் வேறு வழியின்றி ஜெனரேட்டர் அறையை நோக்கித் தள்ளப்பட்டனர்.
மாலை 4 மணிக்கு வந்திருந்தால் கூட விஜய் இந்தத் துயர சம்பவத்தைத் தடுத்திருக்க முடியும்.
ஜெனரேட்டர் அறைக்குள் தவெக-வினர் நுழைந்த போதுதான் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
விஜய் வாகனத்தில் ஏறிய 5-வது நிமித்திடத்திலேயே செருப்பு வீசப்பட்டது. கூட்டத்தில் சிலர் கத்தியால் கீறி இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.
அப்படி என்றால் காயங்கள் எங்கே? எந்த மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைப் பெறுகிறார்கள்?
கூட்டத்தில் ஸ்பிரே அடித்திருந்தால், அது மீடியாவின் எந்த லைவிலும் வரவில்லையே ஏன்?

கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த போதுதான் எனக்கு தகவல் வந்தது. மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் உடனடியாகச் சென்றேன். நான் மருத்துவமனைக்குச் செல்லும்போது இரவு 7.47 மணி இருக்கும்.
அரசு தன் கடமையைச் செய்தது. அந்தக் கட்சி தன் கடமையைச் செய்யவில்லை. காவல்துறையினர் தன் கடமையைச் சிறப்பாகவே செய்தனர். கரூர் துயர நிகழ்வை மடை மாற்றம் செய்ய முயற்சிக்கும் வகையில் விஜய் செயல்படுகிறார்.
ஒரு தவறு நடந்தால் தப்பு செய்தவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். ஏழு மணி நேரம் தாமதமாக வந்தது ஏன் என விஜய்யிடம் கேள்வி கேளுங்கள்.
என்ன நடக்கிறது என்றே தெரியாதவர் எழுதி கொடுக்கும் பாட்டைப் பாடுகிறார். விஜய்யின் அனைத்து கூட்டங்களிலும் தொண்டர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பாஜகவின் உண்மையைக் கண்டறியும் குழு ஏன் மணிப்பூருக்குச் செல்லவில்லை.
மணிப்பூருக்கும், குஜராத்திற்கும் செல்லாத குழு கரூருக்கு வந்தது முரண். சில அரசியல் கட்சிகள் உள்நோக்கத்தோடு குற்றம்சாட்டுகின்றன" என்று கூறியிருக்கிறார்.