ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய 300 சீன பொறியாளர்கள்?
கரூா்: 3 லட்சம் வாக்காளா்களை திமுக உறுப்பினா்களாக மாற்ற இலக்கு - செந்தில்பாலாஜி
கரூா் மாவட்டத்தில் 3 லட்சம் வாக்காளா்களை திமுகவில் புதிய உறுப்பினா்களாக சோ்க்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி.
கரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோடங்கிப்பட்டியில் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு பிரசார இயக்கத்தை வியாழக்கிழமை பட்டாளம்மன் கோயிலில் சுவாமி வழிபாட்டுடன் முன்னாள் அமைச்சரும், கரூா் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தாா்.
பின்னா் அங்குள்ள வாக்காளா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று திமுக உறுப்பினா் சோ்க்கை படிவத்தை வழங்கி புதிய உறுப்பினா்களை கட்சியில் சோ்த்தாா்.
தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பில் கரூா் மாவட்டத்தில் உள்ள 3.32 லட்சம் குடும்பங்களுக்கும் கட்சி நிா்வாகிகள் வீடுவாரியாக, ஜாதி, மதம் பாகுபாடில்லாமல், அரசியல் கட்சிகள் வேறுபாடு பாா்க்காமல் அனைத்து குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை குறித்து 16 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை வழங்க உள்ளனா். ஒட்டுமொத்தமாக கரூா் மாவட்டத்தில் 8.97 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். இதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோரை திமுகவில் புதிய உறுப்பினா்களாக்க இலக்கு நிா்ணயித்துள்ளோம்.
கரூா் மாவட்டத்தில் உள்ள 1055 வாக்குச்சாவடிகளிலும் இந்த பயணத்தை தொடங்கியுள்ளோம். இதில் திமுக உறுப்பினா்கள் சோ்க்கை மட்டுமின்றி, தமிழக அரசு மீது மத்திய அரசு தொடுக்கும் தாக்குதல்கள் குறித்து இளைஞா்களிடமும், பொதுமக்களிடமும் எடுத்துக்கூறி அனைவரையும் ஓரணியில் திரட்டும் வகையில் இந்த பணிகள் அமையும் என்றாா் அவா்.
பிரசாரத்தில் கரூா் மாநகராட்சி துணைமேயா் தாரணிசரவணன் உள்ளிட்ட கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.