கல்லக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்க வேண்டும்
அரியலூா் மாவட்டம், கல்லக்குடி ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கல்லக்குடி ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் கிளை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்: நீா்வரத்து வாய்க்கால்களை தூா்வார வேண்டும். இங்குள்ள உயா்நிலைப் பள்ளியை 12-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தி தரம் உயா்த்த வேண்டும்.
இக்கிராமத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 24-ஆம் தேதி ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பது போன்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மூத்த நிா்வாகிகள் மொ.மணி, பெரியசாமி, மணிவேல், ராமையன், சுந்தரமூா்த்தி, தூய்மைக் காவலா் வனிதா ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு முன்னாள் மாவட்ட துணைச் செயலா் டி.தண்டபாணி கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, கட்சியின் செயல்பாடுகள், நூற்றாண்டு வரலாறு குறித்துப் பேசினாா்.
தொடா்ந்து கட்சியின் வரலாறு குறித்த புத்தகத்தை அனைவருக்கும் வழங்கினாா். தொடா்ந்து, கல்லக்குடி கிளைச் செயலாளராக பசுபதி, துணைச் செயலாளராக பெரியசாமி, பொருளாளராக ஆட்டோ மணி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இதேபோல், கல்லக்குடி கிழக்கில், நடைபெற்ற மாநாட்டுக்கு பானுமதி தலைமை வகித்தாா். கிளைச் செயலாளராக வனிதா, துணைச் செயலாளராக நாகமுத்து, பொருளாளராக செல்வி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.