உதவித்தொகையுடன் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தொழிற்பயிற்சி!
சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்த டிராகன் விண்கலம்!
சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர அனுப்பப்பட்டுள்ள டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்துள்ளது. இந்த விண்கலம் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 16) காலை 10 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்ததாக நாசா தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆன் மெக்ளெய்ன் மற்றும் நிகோல் ஏயெர்ஸ், ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸாவை சேர்ந்த விஞ்ஞானி டகூயா அனிஷி, ரஷிய நிறுவனமான ரோஸ்கோமோஸை சேர்ந்த விஞ்ஞானி கிரில் பெஸ்கோவ் ஆகிய நால்வரும் டிராகன் விண்கலத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் இறங்கினர்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற அவர்களை, அங்கு கடந்த 9 மாதங்களாக தங்கியிருந்து ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வரும் சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோருடன் சேர்ந்து பிற விஞ்ஞானிகளும் கைதட்டி வரவேற்றனர். இந்த படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து, சுனிதா வில்லியம்ஸும் பட்ச் வில்மோரும் டிராகன் விண்கலத்தில் அமெரிக்க மற்றும் ரஷிய வின்வெளி வீரர்கள் இருவருடன் சேர்ந்து மார்ச் 19-ஆம் தேதி பூமிக்கு திரும்புவர் என்று நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த திட்டத்தில் தொழில்நுட்பக் கோளாறுகளாலோ அல்லது பிற காரணங்களாலோ கால தாமதம் ஏற்படவும் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.