சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 149 ரன்கள் இலக்கு!
கோவை: லஞ்சப் பணத்துடன் குளத்தில் குதித்த VAO - சேஸ் செய்து பிடித்த போலீஸ்
கோவை மாவட்டம், ஆலாந்துறை அடுத்துள்ள தொம்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக கிருஷ்ணசாமி மத்வராயபுரம் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்துக்குச் சென்றுள்ளார்.

அங்கு பணியிலிருந்த கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேல் கிருஷ்ணசாமியிடம், ‘ரூ.3,500 லஞ்சம் கொடுத்தால் தான் வாரிசு சான்றிதழ் தர முடியும்.’ என்று கூறியுள்ளார். இதுகுறித்து கிருஷ்ணசாமி லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை ரசாயனம் தடவிய பணத்தை கிருஷ்ணசாமியிடம் கொடுத்துள்ளனர். அவர் அந்தப் பணத்தை எடுத்துச்சென்று விஏஒ வெற்றிவேலிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த காவல்துறையினர் வெற்றிவேலை கையும், களவுமாகப் பிடித்தனர்.

இதை எதிர்பாராத வெற்றிவேல் காவல்துறையிடம் இருந்து தப்பித்து செல்ல முயற்சித்தார். தன் இருசக்கர வாகனத்தில் சிறிது தூரம் சென்றவர், பேரூர் பெரிய குளம் அருகே இறங்கி ஓடியுள்ளார்.
அப்போது கால் தடுக்கி லஞ்ச பணத்துடன் குளத்தில் விழுந்தார். தொடர்ந்து அப்படியே தப்பித்து செல்லவும் முயற்சித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரும் வெற்றிவேலை பின்தொடர்ந்தனர். அவர்களும் குளத்தில் குதித்து வெற்றிவேலைக் கைது செய்தனர்.

வெற்றிவேலிடம் இருந்து பணத்தை மீட்டு, பேரூர் தாலுகா அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி, பிறகு சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.