ரஞ்சி கோப்பை அதிரடியை ஐபிஎல் தொடரிலும் தொடர காத்திருக்கும் கருண் நாயர்!
காதல் திருமணம்; தாலியை அறுத்தெறிந்த பெற்றோர்; உயிரிழந்த பெண் - காவல்துறை விசாரணை
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் கணேசன். இவரின் மனைவி தமிழ்ப்பிரியா. இவர்களின் 21 வயது மகள் பூஜா. பள்ளிப்படிப்பை கும்மிடிப்பூண்டியில் முடித்த பூஜா, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கஸ்தம்பாடியில் உள்ள இலங்கைத் தமிழர் குடியிருப்பு முகாமில் வசிக்கும் தனது பெரியம்மா தமிழ்ச்செல்வியின் வீட்டில் தங்கி, ஆரணியில் உள்ள நர்சிங் கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி படித்துவந்தார். டிப்ளமோ நர்சிங் முடித்துவிட்டு நகைக்கடை ஒன்றிலும் வேலை செய்துவந்த பூஜாவுக்கு கஸ்தம்பாடி முகாமைச் சேர்ந்த சரண்ராஜ் என்ற 19 வயது இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டது. பெயிண்டர் வேலை செய்துவந்த சரண்ராஜ் தன்னைவிட இரண்டு வயது இளையவர் எனத் தெரிந்தும், பூஜா தனது காதலை வெளிப்படுத்தினார். இளைஞனும் காதலை ஏற்றுக்கொண்டதால், இருவரும் சந்தித்துக் காதலித்துவந்தனர்.

காதல் விவகாரம் கும்மிடிப்பூண்டியில் உள்ள பூஜாவின் பெற்றோருக்குத் தெரியவந்ததும், அவர்கள் ஆரணிக்கு வந்து மகளைக் கண்டித்து கும்மிடிப்பூண்டி முகாமிற்கே அழைத்துசென்றனர். தன் காதலன் சரண்ராஜை விட்டுப்பிரிந்து செல்ல மனமில்லாமல் துடித்த பூஜா, பெற்றோரிடம் பிடிவாதம் காட்டினார். சரண்ராஜையே திருமணம் செய்து வைக்கச் சொல்லி அடம்பிடித்தார். இதனால் கொதித்துப்போன பெற்றோர், பூஜாவை அடித்து மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்தனர்.
இந்த நிலையில்தான் மார்ச் 6-ம் தேதி பெற்றோருக்குத் தெரியாமல் முகாம் குடியிருப்பில் இருந்து வெளியேறிய பூஜா, தன் காதலன் சரண்ராஜை வரவழைத்து ஊட்டி குன்னூருக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். `பூஜாவைக் காணவில்லை’ என பெற்றோரும் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகாரளித்துவிட்டு தேடத் தொடங்கினர்.
இதையடுத்து, கோயில் ஒன்றில் திருமணம் செய்துகொண்ட சரண்ராஜும், பூஜாவும் கடந்த 10-ம் தேதி ஆரணி அருகேயுள்ள சரண்ராஜின் முகாம் குடியிருப்புக்குத் திரும்பினர். பிரச்னைக்குரிய சூழ்நிலையைப் புரிந்துகொண்ட இருவரும் பாதுகாப்பு கேட்பதற்காக ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குப் புறப்பட்டனர். இதை தெரிந்துகொண்ட பூஜாவின் பெற்றோரும், உறவினர்களும் காவல் நிலையத்துக்கு அருகேயுள்ள கோயில் முன்பு காத்திருந்தனர். ஜோடியாக காரில் வந்த இருவரையும் மடக்கி வெளியே இழுத்துபோட்டு சரமாரியாகத் தாக்கினர். பூஜாவின் கழுத்தில் இருந்த தாலியை அவரின் தாய் தமிழ்ப்பிரியாவே அறுத்து கீழே எறிந்தார்.
இதையடுத்து, பூஜாவை மட்டும் காரில் ஏற்றிக்கொண்டு, ஆரணி முகாம் வாழ் குடியிருப்பில் உள்ள பெரியம்மாள் வீட்டுக்கே பெற்றோர் அழைத்து சென்றனர். இந்தச் சம்பவத்தால் மிகுந்த மனவேதனைக்குள்ளானார் பூஜா. அடுத்த இரண்டு நாள்களும் வீட்டிலேயே அடைத்துவைக்கப்பட்டிருந்ததால், துக்கம் தாளாமல் கடந்த 12-ம் தேதி மண்ணெண்ணையை தன்மீது ஊற்றி வைத்துகொண்டதாக அவரின் பெற்றோர் சொல்கின்றனர்.

பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட பூஜா, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல், கடந்த மார்ச் 14-ம் தேதியான நேற்று முன்தினம் உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு பூஜாவின் உடல் அவரின் பெற்றோரிடமே ஒப்படைக்கப்பட்டது. இறுதிச் சடங்கிற்காக கும்மிடிப்பூண்டியில் உள்ள தங்களின் முகாம் குடியிருப்புக்கே மகளின் உடலை பெற்றோர் கொண்டு சென்றனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து ஆரணி அருகேயுள்ள களம்பூர் காவல் நிலையப் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, உயிரிழப்புக்கு முன்பு பூஜாவையும், அவரின் காதல் கணவனையும் பெற்றோரும் உறவினர்களும் சரமாரியாக அடித்து உதைக்கும் காட்சிகளும், பூஜாவின் கழுத்தில் இருந்த தாலியை அவரின் தாய் பறித்து வீசும் காட்சிகளும் வெளியாகி நெஞ்சை உலுக்கி இருக்கின்றன.