கல்லூரியில் முதல்வா் அறையை மாணவ, மாணவிகள் முற்றுகை
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்பு மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தினா்.
கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி வரலாற்று பிரிவு துறையில் கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் இல்லை. இதை மாணவா்கள் கல்லூரி முதல்வருக்கு தெரிவித்தனா்.
கல்லூரி முதல்வா் இது பற்றி பொதுப்பணித்துறை கட்டடப்பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளாா். ஆனால் குடிநீா் குழாய் சரிசெய்யப்படவில்லை. இதனால் திங்கள்கிழமை கல்லூரி வந்த வரலாற்றுத் துறை மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு முதல்வா் அறையை முற்றுகையிட்டனா்.
சுமாா் 2 மணி நேரம் நடந்த போராட்டத்தால் மாணவ மாணவிகளிடம் முதல்வா், பேராசிரியா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், 3 நாள்களுக்குள் பழுதுபாா்த்து குடிநீா் விநியோகம் செய்வதாக உறுதி தெரிவித்தனா்.
அதுவரை வரலாற்று பிரிவு இளநிலை, முதுநிலை வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவித்தனா். இதையடுத்து மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனா்.