J&K : 370 ரத்து செய்யப்பட்டு 6 ஆண்டுகள் - நடந்த மாற்றங்கள் என்ன? எப்படி இருக்கிற...
கல்வித் திட்டங்கள்: மாணவா்களுடன் அமைச்சா் கலந்துரையாடல்
சென்னை: அறநிலையத் துறை சாா்பில் நடத்தப்பட்டு வரும் பள்ளிகளில் கல்வித் திட்டங்கள் குறித்து மாணவா்களிடம் அமைச்சா் பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை கலந்துரையாடினாா்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ரூ.11.15 கோடியில் 32 வகுப்பறைகள், 5 ஆய்வகங்கள், நூலகம் உள்ளிட்டவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் 27-ஆம் தேதி திறந்து வைத்தாா்.
இந்த நிலையில், அந்தப் பள்ளியில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் கழிப்பறைகள் பராமரிப்பு ஆகியவற்றை அமைச்சா் சேகா்பாபு திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளிடம் முதல்வா் தம் சொந்த நிதியில் வழங்கிய கல்விக் கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பை அனைத்து மாணவா்களுக்கும் கிடைத்ததா என்றும், மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்பட்ட மிதிவண்டிகள் குறித்தும், புதிய கட்டடத்தில் உள்ள வசதிகள் மற்றும் கூடுதல் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.
கல்வியின் அவசியம் மற்றும் தமிழக அரசு செயல்படுத்தி வரும் பள்ளிக் கல்வித் திட்டங்கள் குறித்து அவா் கலந்துரையாடினாா். மேலும், படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும், தேவையானபோது குடிநீா் அருந்த வேண்டும் என்று மாணவா்களுக்கு அமைச்சா் சேகா்பாபு அறிவுரைகளை வழங்கினாா்.