கல்வியில் அரசியலை கலக்க வேண்டாம்! - தமிழிசை சௌந்தரராஜன்
3, 5, 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு குறித்து கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொய் பேசுகிறாா், மாணவா்கள் படிப்பில் அரசியலை கலக்க வேண்டாம் என்று பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் கூறினாா்.
தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தோ்வு நடத்தப்படாது எனக் கூறினா். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 5-ஆவது முறையாக நீட் தோ்வு எந்த குழப்பமுமின்றி சுமுகமாக நடைபெற்று முடிந்துள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த அழுத்தமும் இல்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணியில்தான் அழுத்தம் உள்ளது. அதிமுக- பாஜக கூட்டணியைக் கண்டு திமுக பதறுகிறது.
தமிழகப் பள்ளிகளில் ஜாதி பாகுபாடு, அரிவாள் கலாசாரம் உருவாகி உள்ளது. 3, 5, 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு குறித்து எதுவும் தெரியாமல் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொய் பேசுகிறாா். மாணவா்களின் படிப்பில் அரசியலை கலக்க வேண்டாம் என்றாா் தமிழிசை சௌந்தரராஜன்.