``கல்வியில் ஆரிய திராவிட கருத்தியல்" - இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா பேச்சு!
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். மேலும், துணை முதல்வர் ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள், நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

கல்விக்கு இரண்டு குணம் இருக்கு
இவ்விழாவில் பங்கேற்று பேசியிருக்கும் தியாகராஜன் குமாரராஜா, "பாண்டிய மன்னன் கல்வியைப் பற்றி ஒரு பாடல் எழுதியிருக்கிறார். அதில் 'வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும், கீழ்ப்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன் கண் படுமே' என்று கல்வியின் முக்கியத்துவம் பற்றி பாடுகிறார்.
கீழே இருக்கிறவன் கல்வி கற்றால், மேலே இருப்பவன், அவனோட சமமாக சேர கட்டாயத்தை ஏற்படுத்தும்.
கல்விக்கு இரண்டு குணம் இருக்கு. அதுல ஒரு குணம் இது. இன்னொன்று, 'வெள்ளத்தால் அழியாது வெந்தழலால் · வேகாது வேந்த ராலும் · கொள்ளத்தான் இயலாது கொடுத்தாலும் · நிறைவொழியக் குறைபடாது' என்று விவேக சிந்தாமணி என்பவர் சொல்லியிருக்கிறார். பணம் கொடுத்தால் குறையும், ஆனால் கல்வி எவ்வளவு கொடுத்தாலும் குறையாது. கொடுப்பவருக்கும் அள்ளித்தரும், பெற்றுக் கொள்பவர்களுக்கு அள்ளித்தரும். அதுதான் கல்வியின் இரண்டாவது குணம்.

துரோணாச்சாரியார், கிருபாச்சாரியார் தொடங்கி, ராஜகோபாலாச்சாரி வரையும்
கல்வியைப் பொறுத்தவரை இங்கு இரண்டு கருத்தியல் இருக்கிறது. ஒன்று திராவிட கருத்தியல், இன்னொன்று ஆரியக் கருத்தியல். திராவிட கருத்தியல் எல்லோரும் எப்படியாவது படித்து சமமாக வேண்டும் என்று கூறுகிறது. ஆரியக் கருத்தியல் கல்வியைக் கற்கவேண்டுமென்றால் உயர்ந்த குடியாக இருக்க வேண்டும் என்கிறது. துரோணாச்சாரியார் கீழ்குலத்தில் பிறந்து கற்க முடியாமல் தூரத்தில் இருந்து கற்ற ஏகலைவனிடம் கட்டை விரலை கேட்டார், கிருபாச்சாரியார் கீழ் குலத்தில் பிறந்து கற்றதால் கர்ணனுக்கு 'உன் கல்வி முக்கியமான நேரத்தில் மறந்து போகும்' என சாபம் கொடுத்தார்.
இப்படி துரோணாச்சாரியார், கிருபாச்சாரியார் தொடங்கி, ராஜகோபாலாச்சாரி வரையும் சமுதாயத்தில் கீழே இருப்பவர்கள் கல்வி கற்கக் கூடாது என்று பல சதிச்செயல்களைச் செய்து வந்திருக்கின்றனர்.
இன்று அது நவீனமாக மாறி, புதியக் கல்விக் கொள்கை என்ற வடிவில் எல்லோரையும் கல்வி கற்கக் கூடாது என்று புதுப்புது தடைகளை ஒன்றிய அரசு கொண்டு வருகிறது. அதை மறுத்தால் கல்விக்கான நிதியைத் தர மறுக்கிறது.

இப்படியான சூழலில், இத்தனை சதிச்செயல்களையும் எதிர்கொண்டு கல்வியை எல்லோருக்கும் போய் சேர வேண்டும், சமூகநீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. ஒன்றிய அரசு அவரை கட்டி கடலில் போட்டாலும், தான் மட்டும் நீந்தி தப்பிக்க நினைக்காமல், எல்லோரையும் முன்னேற்ற வேண்டும் என்று உழைத்துக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" என்று பேசியிருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா.