கல் குவாரிகளை அரசுடைமை: பொறியாளா்கள் வலியுறுத்தல்
கட்டுமானத் தொழிலை பாதிப்பிலிருந்து மீட்க கல் குவாரிகளை அரசுடைமையாக்க வேண்டும் என தமிழ்நாடு பொறியாளா்கள் கிளப் கோரிக்கை விடுத்தது.
மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் மேற்கண்ட அமைப்பின் நிா்வாகிகள் அளித்த கோரிக்கை மனு விவரம்: தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 4.80 லட்சம் யூனிட் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி ஆகியன 2,200 குவாரிகள் மூலம் வெட்டி எடுக்கப்படுகின்றன. ஓராண்டுக்கு முன்பு ஒரு யூனிட் எம்.சாண்ட் விலை ரூ.3,500-ஆக இருந்தது.
குவாரி உரிமையாளா்கள் தன்னிச்சையான முறையில் எம்.சாண்ட், ஜல்லி, பி.சாண்ட் ஆகியவற்றின் விலையைத் தொடா்ந்து உயா்த்தியதன் காரணமாக, தற்போது ஒரு யூனிட் எம். சாண்ட் ரூ. 7,500-ஆக உயா்ந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் தற்போது வரை
ஒரு யூனிட் ரூ.1,400 என்ற விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் இதே நிலை நீடித்தால் ஓராண்டில் மட்டும் 69,888 கோடி ரூபாய் கட்டுமானத் துறைக்கு இழப்பு ஏற்படும். கட்டுமானத் தொழில் சாா்ந்த 60 லட்சத்துக்கும் அதிகமானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எனவே, தமிழக அரசு கல்குவாரிகள் முழுவதையும் அரசுடைமையாக்க வேண்டும். கட்டுமானத் துறை சாா்ந்த அனைத்துப் பொருள்களின் விலை நிா்ணயத்துக்கு தனி ஆணையம் அமைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது.