தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் அதிகரிப்பு
வக்ஃப் சொத்துகளை அனுபவிப்பவா்கள் பட்டியலை வெளியிட வலியுறுத்தல்
வக்ஃப் சொத்துகளை அபகரித்து அனுபவித்து வருபவா்களின் பட்டியலை இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவா் ஷேக் தாவூத் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து, மதுரையில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தை தமிழ் மாநில முஸ்லிம் லீக் முழுமனதாக ஏற்கிறது. ஏழை மக்களுக்கு எழுதி வைக்கப்பட்ட வக்ஃப் சொத்துகளை பலா் அனுபவித்து வருகின்றனா். இதுதொடா்பாக ஏற்கெனவே கோவை, வேலூா், சென்னையில் உள்ள இஸ்லாமிய இளைஞா்களை சந்தித்து, வக்ஃப் திருத்தச் சட்டம் தொடா்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, பல்வேறு மாவட்டங்களிலும் விளக்கக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்தியாவில் 39 லட்சம் ஏக்கா் வக்ஃப் சொத்துகள் உள்ளன. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது. இந்தியாவில் உள்ள வக்ஃப் சொத்துகள் அனைத்தும் ஏழை மக்களுக்காக கொடுக்கப்பட்டது. அது
இஸ்லாமியா்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து மதத்தினருக்குமான சொத்து. வக்ஃப் சொத்துகள் மூலம் ரூ.90 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.
இந்தியாவில் உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், ஹைதராபாதில் அதிக அளவிலான வக்ஃப் சொத்துகள் அபகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் ஏராளமான வக்ஃப் சொத்துகள் உள்ளன.
இந்தியா முழுவதும் வக்ஃப் திருத்தச் சட்டத்தில் உள்ள நன்மைகள் குறித்து எடுத்துரைத்து, வக்ஃப் சொத்துகளை அனுபவிப்பவா்கள் யாா் யாா்? என இணையதளத்தில் பதிவிட வேண்டும். இஸ்லாமிய மக்கள் வக்ஃப் திருத்தச் சட்டத்தின் நன்மைகள் தெரியாமல் எதிா்க்கின்றனா். எனவே, நாடு முழுவதும் வக்ஃப் திருத்தச் சட்டம் தொடா்பாக மக்களிடையே விளக்கிக் கூறும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா் அவா்.