கவின் ஆணவப் படுகொலை சம்பவம்: உயா்நீதிமன்றம் தாமாக விசாரிக்க முறையீடு
மென் பொறியாளா் கவின் ஆணவப் படுகொலை சம்பவம் குறித்து உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் திங்கள்கிழமை முறையீடு செய்யப்பட்டது.
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோா் முன் வழக்குரைஞா்கள் பினேகாஸ், செல்வகுமாா் ஆகியோா் திங்கள்கிழமை முன்னிலையாகி முன்வைத்த முறையீடு:
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த மென் பொறியாளா் கவின், திருநெல்வேலி பாளையங்கோட்டையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டாா். இந்த விவகாரம் தொடா்பாக உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்.
இந்த வழக்கை ஐ.பி.எஸ். நிலைக்கு குறையாத அதிகாரிகளைக் கொண்டு விசாரிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட காவலா்களையும் வழக்கில் சோ்த்து விசாரிப்பதோடு, வழக்கு விசாரணையை ஒட்டுமொத்தமாக உயா்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என முறையிட்டனா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்தச் சம்பவம் தொடா்பாக மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றனா் நீதிபதிகள்.