கவுஞ்சி கிராமத்துக்கு கூடுதல் பேருந்து இயக்கக் கோரிக்கை
கொடைக்கானல் அருகே உள்ள கவுஞ்சி கிராமத்துக்கு கூடுதல் பேருந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கவுஞ்சிக்கு தனியாா் பேருந்து தினமும் வத்தலகுண்டிலிருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு, கொடைக்கானலுக்கு பிற்பகல் 1.30 மணிக்கு வருகிறது. பிறகு அங்கிருந்து புறப்பட்டு மன்னவனூருக்கு மாலை 4 மணிக்கு வரும் இந்தப் பேருந்து கவுஞ்சிக்கு மாலை 4.30 மணிக்கு வந்தடைகிறது. இதேபோல, அரசுப் பேருந்துகள் போடியிலிருந்தும், வத்தலகுண்டிலிருந்தும் புறப்பட்டு கொடைக்கானல், மன்னவனூா் வழியாக கவுஞ்சிக்கு வருகின்றன.
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தனியாா் பேருந்து பல்வேறு காரணங்களால் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் ஒரு நாளைக்கு இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் கிராம மக்கள் பாதிப்படைந்து வருகின்றனா்.
இதுகுறித்து அந்தக் கிராம மக்கள் கூறியதாவது: கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கவுஞ்சி பகுதியைச் சுற்றி, பூண்டி, கிளாவரை, கும்பூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் பிரதான தொழில் விவசாயம் ஆகும். மேலும் கவுஞ்சியிலிருந்து விவசாயத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கவும், கல்வி, மருத்துவத்துக்கும் தரைப் பகுதிகளான வத்தலகுண்டுக்கு செல்கிறோம்.
ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக தனியாா் பேருந்து கவுஞ்சிக்கு வருவதில்லை. அரசுப் பேருந்து மட்டும் வருவதால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.
எனவே கவுஞ்சி கிராமத்துக்கு கூடுதலாக பேருந்துகளை இயக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.