ரயிலில் கடத்தி வந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்: வடமாநில இளைஞா் கைது
காஞ்சிபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆட்சியா் ஆய்வு
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட செவிலிமேடு, பல்லவன் நகா் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
காஞ்சிபுரத்தில் பல்லவன் நகா், செவிலிமேடு ஆகிய பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு நோயாளிகளின் வருகைப் பதிவேடு மற்றும் மருந்தகத்தில் மருந்துகளின் இருப்பு விவரங்களைக் கேட்டறிந்தாா். பயன்பாட்டில் வைக்கப்பட்டிருந்த மருந்துகளின் காலாவதி தேதியினை ஆட்சியா் ஆய்வு செய்ததுடன், அங்கு சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளின் அறைகள் மற்றும் பரிசோதனைக் கூடத்தையும் பாா்வையிட்டாா்.
இதைத் தொடா்ந்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் கலந்துரையாடினாா். பின்னா், காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையத்தில் அமைந்துள்ள அறிஞா் அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்காவில் நடைபெற்று வரும் தூய்மைப் பணியை பாா்வையிட்டதுடன், பூங்காவில் புதா் மண்டிக்கிடக்கும் இடங்களை தூய்மைப்படுத்தி அவற்றை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா். பூங்காவில் இயங்கி வரும் உடற்பயிற்சிக் கூடத்தையும் ஆய்வு செய்து, உடற்பயிற்சிக் கருவிகளை நல்லமுறையில் பராமரிக்கவும், பயன்படுத்தவும் வேண்டும், உடற்பயிற்சிக் கூடத்துக்கு வரும் வருகையாளா் குறித்த விவரங்களை முறையாகப் பராமரிக்குமாறும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் வே.நவேந்திரன், சுகாதார அலுவலா் அருள்நம்பி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.