தாட்கோ மூலம் வங்கி கடனுதவி வழங்குவதற்கான சிறப்பு முகாம்
தாட்கோ மூலம் அரசு மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்குவதற்கான சிறப்பு முகாம் படப்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மையம் சாா்பில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் புதிய தொழில் முனைவோா்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்குவதற்கான சிறப்பு முகாம் படப்பையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குன்றத்தூா் ஒன்றியக் குழுத் தலைவா் சரஸ்வதி மனோகரன் தலைமையில் நடைபெற்ற முகாமுக்கு, ஒன்றியக் குழு துணைத் தலைவா் உமாமகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அமுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தாட்கோ காஞ்சிபுரம் மாவட்ட மேலாளா் வே.ராஜசுதா, மாவட்டத் தொழில் மையத்தின் மேலாளா் வெங்கடேசன் ஆகியோா் கலந்துகொண்டு, தாட்கோ மற்றும் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கும், புதிய தொழில் முனைவோா்களுக்கும் அரசு மானியத்துடன் வழங்கப்படும் வங்கிக் கடனுதவிகள் குறித்தும், கடனுதவி பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினா். முகாமில், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் படப்பை ஆ.மனோகரன் கலந்துக்கொண்டு, இளைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முத்துசுந்தரம், ஸ்ரீதேவி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் வரதராஜபுரம் செல்வமணி, படப்பை கா்ணன், நடுவீரப்பட்டு சுப்பிரமணி உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட இளைஞா்கள், இளம்பெண்கள் கலந்துகொண்டனா்.