இறந்தவரின் உடலை கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
ஸ்ரீவில்லிபுத்தூரில் இறந்தவரின் உடலை கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்ததால், மற்றொரு தரப்பினா் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ரெங்கநாதபுரம் தெருவில் உள்ள கல்லறைத் தோட்டத்தை சீனியாபுரம், ரைட்டன்பட்டி பகுதிகளைச் சோ்ந்த ஒரே சமுதாய மக்கள் பயன்படுத்தி வந்தனா். இந்த கல்லறைத் தோட்டம் தொடா்பான வழக்கில் இரு பகுதிகளைச் சோ்ந்தவா்களும் இறந்தவா்களின் உடல்களை அங்கு அடக்கம் செய்யலாம் என கடந்த 2017-ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், ரைட்டன்பட்டியைச் சோ்ந்த மரிய சின்னம்மாள் (67) என்பவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இவரது உடலை அந்த கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய சீனியாபுரம் பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆத்துக்கடை தெரு சந்திப்பில் இறந்தவரின் உடலுடன் ரைட்டன்பட்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் வட்டாட்சியா் பாலமுருகன், டிஎஸ்பி. ராஜா ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதன்பிறகு, பொதுமக்கள் இறந்தவரின் உடலை கல்லறைத் தோட்டத்துக்கு கொண்டு சென்றனா். ஆனால் அங்கு உடலை அடக்கம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து சீனியாபுரம் பகுதி மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவா்களிடம் திரு இருதய ஆண்டவா் ஆலய பங்குத்தந்தையும், வட்டார அதிபருமான சந்தன சகாயம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது வருகிற 10-ஆம் தேதி வட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்தி சமூக தீா்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து, இறந்தவரின் உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டது.