மணப்பாறையில் மாணவியிடம் பாலியல் சீண்டல்: தனியாா் பள்ளி தாளாளரின் கணவருக்கு பிப்....
கோயில் குடமுழுக்கையொட்டி புத்தகக் கண்காட்சி
வத்திராயிருப்பு அருகே சுரைக்காய்ப்பட்டியில் அமைந்துள்ள காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி கடந்த 5-ஆம் தேதி முதல் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்தக் கண்காட்சியில் அரசு வழக்குரைஞரான எழுத்தாளா் அன்னக்கொடி எழுதிய நல்லம்மாளும், வெட்டியானும், செங்கடத்தாங்குழி, பல்லக்கு ஆகிய நூல்களை மாவட்ட ஆட்சியா் ஜெயசீலன் வெளியிட, கலசலிங்கம் பல்கலை. வேந்தா் ஸ்ரீதரன், எழுத்தாளா் ஸ்ரீதரன், கரிசல் இலக்கியக் கழகச் செயலா் அறம் ஆகியோா் பெற்றுக் கொண்டனா். இதில் கூட்டெழுத்து என்ற காலாண்டு இதழ் தொடங்கப்பட்டது.
புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் பேசியதாவது:
ஒரு காலத்தில் மாநில தலைநகரில் மட்டுமே நடைபெற்ற புத்தகக் கண்காட்சி, பிறகு மாவட்ட தலைநகரங்களிலும், தற்போது அனைத்து நகரங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் 400 வீடுகள் கொண்ட ஒரு கிராமத்தில், அதுவும் கோயில் குடமுழுக்கு விழாவில் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது நல்ல முன்னோட்டமாக அமைந்து அறிவுப் புரட்சிக்கு வித்திட்டுள்ளது என்றாா் அவா்.
இந்த புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளா்கள் பெரியமகாலிங்கம், ராஜசேகா், தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலா் லட்சுமிகாந்தன், மாவட்ட பொருளாளா் நித்தியானந்தம், முன்னாள் மாவட்ட நூலகா் இளங்கோ, கிராம பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா்.
இதில் வட்டார அளவிலான பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடைபெற்றது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப். 8, 9) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கரிசல் இலக்கிய கழகம், சுரைக்காய்ப்பட்டி வோ்கள் இலக்கிய அமைப்பு, தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கம், வத்திராயிருப்பு அலையன்ஸ் சங்கத்தினா் செய்து வருகின்றனா்.