"Salomiya was actually the first title for Dude; Because" - Keerthiswaran | Prad...
காஞ்சிபுரம், மானாம்பதி வானசுந்தரேஸ்வரர் கோயில்: இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்; செல்வாக்கு சேரும்!
மானாம்பதி வானசுந்தரேஸ்வரர்
சோழர்கள் எழுப்பிய சிவாலயங்கள் ஏராளமானவை இந்த மண்ணில் உள்ளன. அவை ஒவ்வொன்றும் புனிதமானவை. புராணத் தொடர்பு கொண்டவை. அப்படிப்பட்ட தலங்களை தரிசிப்பதன் மூலம் அந்த ஆலயங்களுக்குச் சேவை செய்வதன் மூலம் பல்வேறு நலன்களை நாம் பெற முடியும். அப்படிப்பட்ட ஒரு தலம் தான் மானாம்பதி வானசுந்தரேஸ்வரர் திருக்கோயில்.
காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது உத்திரமேரூர். அங்கிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ளது மானாம்பதி கிராமம். காஞ்சிபுரத்திலிருந்து மேல்ரோடு வழியே உத்திரமேரூர் செல்லும் பேருந்துகளும், சென்னையிலிருந்து உத்திரமேரூர் வழியாக வந்தவாசி செல்லும் பேருந்துகளும் இந்த ஊர் வழியாகவே செல்கின்றன.

மானாம்பதி
ராஜேந்திர சோழன், கங்கையையும் கடாரத்தையும் வென்று, 'கங்கை கொண்டான்,' 'கடாரம் வென்றான்' என எல்லோராலும் போற்றப்பட்டான். வடக்கில் இருந்து சைவர்களை அழைத்து வந்து, தொண்டை மண்டலம் என்று சொல்லப்படும் காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அவர்களை அங்கே குடியமர்த்தினான். அந்த ஊருக்குத் தன் தாயாரின் நினைவாக, வானவன்மாதேவிபுரம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தான்.
அத்துடன், அங்கே அழகிய சிவாலயம் ஒன்றையும் கட்டினான். அந்த ஆலயத்தில் முறையாக வழிபாடுகள் நடத்தப்படவும் வேதங்கள் ஓதப்படவும் நிவந்தங்களை எழுதிவைத்தான். அத்தகைய பெருமை மிகு ஆலயமே மானம்பதி ச்ரி வானசுந்தரேஸ்வரர் ஆலயம். இதற்கு சான்றாக இங்கே ராஜேந்திர சோழன் காலத்துக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. வானவன் மாதேவிபுரமே பிற்காலத்தில் மருவி மானாம்பதி ஆனது என்கிறார்கள்.
செல்வம், செல்வாக்கு சேரும்
நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த வேதியர்களை அழைத்து வந்து, அவர்களுக்கு அங்கே வீடுகள் கட்டிக் கொடுத்து, வேத பாடசாலையும் அமைத்துக் கொடுத்தான் ராஜேந்திர சோழன் என்கிறது கல்வெட்டுக் குறிப்பு. இதனால், அந்த ஊர் வானவன்மாதேவி சதுர்வேதி மங்கலம் என்றும் அழைக்கப்பட்டதாம்.
இந்திரன் தன் ஆணவத்தால் சூரபத்மனால் தோற்கடிக்கப்பட்டு சிறைப்பட்டான். இதனால் அவனது இந்திரப் பதவி பறிபோனது. பிறகு முருகப்பெருமான் சூரனை அழித்து தேவர்களை சிறைமீட்டார். என்றாலும் இந்திரப்பதவியை இந்திரனால் மீண்டும் பெற முடியவில்லை.
அப்போது அவன் துயர்தீர்க்கும் தலம் எது என்று தேடி அலைந்தான். பிறகு முனிவர்கள் வழிகாட்ட இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டான். இங்குள்ள தீர்த்தக் குளம் மிகவும் புனிதமானது. இதில் நீராடி ஈசனை வழிபட்ட இந்திரனுக்கு ஈசன் காட்சி கொடுத்ததோடு அவன் இழந்த இந்திரப் பதவியையும் கொடுத்தார்.
எனவே இந்தத் தலத்துக்கு ஈசனை வழிபட்டால் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும். செல்வம், செல்வாக்கு சேரும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீவானசுந்தரேஸ்வரர் - பெரியநாயகி
இங்கே, சுவாமிக்கு ஸ்ரீவானசுந்தரேஸ்வரர் என்பது திருநாமம். தாயார் பெரியநாயகி என்கிற திருநாமத்தோடு அருள்பாலிக்கிறாள். இருவரும் கருணைக் கடல்களாக இங்கே காட்சிகொடுக்கிறார்கள். குறிப்பாக பெரியநாயகி அம்பிகையின் சந்நிதியில் நின்று வழிபட்டாலே மன நிம்மதியும் ஆறுதலும் கிடைக்கிறது என்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் மகா கணபதி, ஆறுமுக சுவாமி, தட்சிணாமூர்த்தி, சண்டீஸ்வரர், பிரம்மா, துர்கை, பைரவர், நாயன்மார்கள் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. தைப்பூசம், மாசிமகம் முதலானவை இங்கு சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன.
அதிலும் குறிப்பாக தைப்பூசம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். சுற்றியிருக்கும் கிராமங்களைச் சேர்ந்த 10 கோயில்களின் தெய்வங்களும் தைப்பூச உற்சவ காலத்தில் இங்கே எழுந்தருள்கிறார்கள் என்பது சிறப்பு.
அத்தனை தெய்வங்களையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்வ்தால் மனமும் சிந்தையும் மகிழ்வதோடு புண்ணிய பலன்களும் அதிகரிக்கும்.
இப்படிப்பட்ட பழைமையும் பெருமையும் வாய்ந்த சோழமன்னர்கள் வழிபட்ட மானாம்பதி ஸ்ரீவானசுந்ரேஸ்வரரை வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை சென்று தரிசியுங்கள். உங்கள் பிரச்னைகளைத் தீர்த்து பிரகாசமான எதிர்காலத்தைத் தருவார் அந்த ஈசன்.