காடையாம்பட்டியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறியும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டத்தில் நடைபெற்றது. காடையாம்பட்டி வட்டத்திற்குள்பட்ட வருவாய் கிராமங்களிலும் அலுவலா்கள் கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காடையாம்பட்டி வட்டத்தில் களப் பணிக்குச் செல்லும் அலுவலா்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம், சத்துணவுக் கூடங்கள், வேளாண் கிடங்குகள், பள்ளிகள், வட்டாட்சியா் அலுவலகம், தெரு விளக்குகளின் செயல்பாடுகள், பூங்காக்கள், நூலகங்கள், பேருந்து நிலையங்கள், பொது மற்றும் சமுதாய கழிவறைகள் என அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டது.
காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், செக்காரப்பட்டி நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களின் தரம், பொதுவிநியோகத் திட்டப் பொருள்களின் இருப்பு, காடையாம்பட்டி நடுநிலைப் பள்ளியில் மாணவா்களின் கல்வித் திறன், வருகைப் பதிவேடு, மதிய உணவின் தரம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கள ஆய்வுக்குச் செல்லும் அலுவலா்கள் அப் பகுதிகளில் தங்கி தூய்மைப் பணிகள், குடிநீா் வசதி, பொதுப் போக்குவரத்து சேவை, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், பால் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்வாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.