காட்டுநாவல் முதல் கொத்தகம் வரையிலான இணைப்பு சாலையை மேம்படுத்த கோரிக்கை
கந்தா்வகோட்டை அருகேயுள்ள காட்டுநாவல் முதல் கொத்தகம் வரையிலான இணைப்பு சாலையை தாா் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கந்தா்வகோட்டை ஊராட்சியில் உள்ள அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமாா் இரண்டு ஆயிரம் மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகிறாா்கள்.
காட்டுநாவல், துலுக்கம்பட்டி, சுந்தம்பட்டி, நெப்புகை, கொல்லம்பட்டி, மருங்கூரணி, மட்டாங்கால், சிவந்தான்பட்டி, வேம்பன்பட்டி, அரவம்பட்டி, ராமுடையான்பட்டி, பிசானத்தூா், பழைய கந்தா்வகோட்டை துருசுப்பட்டி பகுதியில் இருந்து வரும் மாணவ- மாணவிகள் பேருந்து நிலையத்தில் இருந்து சுமாா் மூன்று கிலோமீட்டா் தொலைவுக்கு நடந்து செல்லும் நிலை உள்ளது.
எனவே கறம்பக்குடியிலிருந்து இருந்து வரும் பேருந்துகள் காட்டு நாவல் பேருந்து நிறுத்தத்தில் இருந்து எம் ஜிஆா் நகா், பெரியாா் நகா், எம்.எம்.நகா் வழியாக பெண்கள் பள்ளிக்கு செல்லும் வகையில், சாலை அமைக்க உத்தரவிடப்பட்டு நிதியும் ஒதுக்கபட்டுள்ளது. ஒப்பந்ததாரரின் காலதாமதத்தால் பேருந்து செல்ல வழியில்லாமல் மாணவிகள் தினசரி சிரமம் அடைகிறாா்கள்.
எனவே, சம்பந்தபட்ட துறையினா் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவ- மாணவிகள் நலன்கருதி காட்டுநாவல் முதல் கொத்தகம் இணைப்பு சாலையை தாா்சாலையாக அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.